தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க மறுப்பது மத்திய அரசு இழைக்கும் துரோகம்! -இபிஎஸ...
புதுச்சேரி: `அவனுங்க 3 பேரையும் முடிச்சிடு' - உத்தரவு போட்ட காதலி; கொலைசெய்து வீடியோ அனுப்பிய ரௌடி!
புதுச்சேரியின் மையப்பகுதியில் இருக்கும் ரெயின்போ நகர், அடர்த்தியான குடியிருப்புப் பகுதி. அதில் 7-வது குறுக்குத் தெருவில் இருக்கும் பாழடைந்த ஒரு வீட்டில், மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கடந்த 14-ம் தேதி காலை பெரியகடை போலீஸாருக்கு தகவல் சென்றது. அதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீஸார் அங்கு விரைந்தனர். அப்போது அரிவாளால் தலை, முகங்கள் சிதைக்கப்பட்டு கிடந்தவர்களிடமிருந்து வெளியேறிய ரத்தம் தரையில் வழிந்தோடியது. அவர்களில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒருவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிய போலீஸார், மற்ற இருவரது சடலங்களையும் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதையடுத்து அங்கு தடயங்களை சேகரித்த போலீஸார், அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டது ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த ரிஷி, தீடீர் நகரைச் சேர்ந்த தேவா என்பது தெரியவந்தது. அதேபோல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த ஆதி என்பவரும், சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார். அதனால் கொலையின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. இதில் ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த ரிஷி என்பவர், பல ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட பிரபல தாதா தெஸ்தானின் மகன் என்பது தெரிய வந்தது.
அதையடுத்து ரெயின்போ நகர் சத்யா, ரோடியர்பேட் சக்திவேல், சரண், வாணரப்பேட்டை சஞ்சீவி, சாரம் வெங்கடேஷ், ஆட்டுப்பட்டி சாரதி, விஷ்ணு, டி.வி.நகர் காமேஷ், சோலை நகர் ரவீந்திரகுமார் மற்றும் ஒரு சிறுவன் உள்ளிட்ட 10 பேரை முதல் கட்டமாக கைது செய்தது போலீஸ். முன்பகை காரணமாக 3 பேரையும் கொலை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்த நிலையில், தப்பிக்க `கூகுள் பே’ மூலம் பணம் கொடுத்து உதவியதாக ரௌடி சத்யாவின் காதலியான சுமித்ராவுடன், ஆபிரகாம், ஹரீஷ் பல்லாஸ் என்ற இருவரையும் கைது செய்திருக்கின்றனர் போலீஸார்.

சுமித்ரா கொடுத்த வாக்குமூலம் குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், ``மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்த ரௌடி சத்யாவும், வம்பாகீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த டாட்டூ போடும் சுமித்ராவும் காதலித்து வந்தனர். அதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். சம்பவம் நடைபெறுவதற்கு முதல் நாள் சத்யாவும், சுமித்ராவும் புதுச்சேரி மெரினா கடற்கரைக்குச் சென்றிருக்கின்றனர். அப்போது தன்னை நோட்டம் பார்க்க வந்த ரஷியையும் அவனது நண்பர்களையும் பார்த்த சத்யா, என்னை கொலை செய்ய ரூட் போடுகிறார்கள்.
அதற்காகத்தான் என் பழைய நண்பன் ரஷி, என் எதிகளுக்காக ரூட் பார்க்கிறான் என்று சுமித்ராவிடம் கூறியிருக்கிறார். அப்போது, `உன்னை கொலை பண்றதுக்கு முன்னாடி அவனுங்க 3 பேரையும் நீ முடிச்சிடு. கொஞ்ச நாள்ல ஜாமீன்ல வந்துடலாம். அப்புறம் நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கலாம். ஏற்கனவெ உன் மேல் 5 கொலை வழக்கு இருக்கு. ஆனாலும் ஜாமீன்லதான இருக்க. அதனால ஈசியா ஜாமீன்ல வந்துடலாம். மூனு பேரையும் முடிச்சி விட்டுடு’ என்று சத்யாவிடம் கூறியிருக்கிறார் சுமித்ரா. அவர் கூறியதற்கு சரியென்று சம்மதித்த சத்யா, அப்போதே ரஷியிடம் சமாதானம் பேசுவது போல நடித்து அவரையும், அவரது நண்பர்களையும் அழைத்துச் சென்றிருக்கிறார்.

அன்றைய இரவு சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு மது வாங்கிக் கொடுத்த சத்யா, தன்னுடைய நண்பர்களையும் அழைத்து மது குடித்திருக்கிறார். அவர்களுக்கு மது போதை தலைக்கு ஏறியதும், இரவு முழுவதும் கொடூரமாக அடித்து சித்ரவதை செய்திருக்கிறார்கள் சத்யாவும், அவனது நண்பர்களும். இறுதியாக அவர்களை முகத்தை அரிவாள்களால் வெட்டி சிதைத்து, கொலை செய்திருக்கிறார்கள். அந்த சம்பவம் அனைத்தையும் அப்படியே வீடியோ எடுத்து, தன்னுடைய காதலி சுமித்ராவுக்கு வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பி வைத்திருக்கிறான் சத்யா. அதன்பிறகு சத்யாவும், நண்பர்களும் அங்கிருந்து தப்பிக்க, அவனுக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்பியிருக்கிறார் சுமித்ரா” என்று அதிர்ச்சி கொடுத்தனர்.