ஐபிஎல்லுக்கு முன் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்புவேன்! -கம்மின்ஸ்
ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக காயத்தில் இருந்து மீண்டு அணிக்குத் திரும்புவேன் என்று ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய பார்டர் கவாஸ்கர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் சிட்னி டெஸ்ட்டின்போது கணுக்கால் காயத்தால் அவதியடைந்தார். மேலும், தனக்கு குழந்தை பிறக்கவிருந்ததால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி தொடரில் அவரால் பங்கேற்க முடியவில்லை. பாட் கம்மின்ஸ் அதன் தொடர்ச்சியாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்தும் முழுமையாக விலகினார்.
இந்த நிலையில் மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அணியில் இணைவேன் என்று ஹைதராபாத் சன்ரைசர்ஸ் கேப்டனான பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், அதன்தொடர்ச்சியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக லண்டன் லார்ட்ஸில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாகவும் முழு உடல் தகுதியை எட்டுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க... முகமது ஷமிக்கு ரிக்கி பாண்டிங் புகழாரம்!
இதுகுறித்து பாட் கம்மின்ஸ் கூறுகையில், “குடும்பத்தின் மீது முழுக் கவனம் செலுத்தி அவர்களுடன் நேரத்தை செலவிடுவதற்கு அற்புதமான நேரம். இந்த நேரத்தில் விளையாட்டு, சுற்றுப்பயணம் பற்றி கவலைப்பட தேவையில்லை. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இலங்கையுடன் ஆஸ்திரேலிய அணி விளையாடுவதை தொலைக்காட்சியில் பார்ப்பது வேடிக்கையாக இருந்தது. நான் பல ஆண்டுகளாக தொலைக்காட்சி பார்ப்பதே இல்லை. ஆனால், அவர்கள் அற்புதமாக விளையாடினர். அவர்கள் மீது எந்தக் குறையும் இல்லை.
டி20 போட்டியில் 4 ஓவர்கள்.. அதன் பின்னர் டெஸ்ட் தொடர்.. அதுதான் என்னுடைய முழுமையான நோக்கம். அடுத்த வாரத்தில் இருந்து பயிற்சியைத் தொடங்குங்கள். டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அதில் நீங்கள் குறைந்த பந்துகளை வீசுவீர்கள். ஆனால், அழுத்தம் அதிகமாகவே இருக்கும்” எனத் தெரிவித்தார்.
31 வயதான பாட் கம்மின்ஸை ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி ரூ.18 கோடிக்கு தக்கவைத்துள்ளது. மேலும், இவரது தலைமையிலான ஹைதராபாத் அணி கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் 2-வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க...74 ஆண்டுகள், 352 போட்டிகளுக்குப் பிறகு வரலாற்றுச் சாதனை..! ரஞ்சி இறுதிப் போட்டியில் கேரளம்!