கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்
Doctor Vikatan: எதைச் சாப்பிட்டாலும் வயிற்று உப்புசம்... என்னதான் காரணம், எப்படி சரிசெய்வது?
Doctor Vikatan: என் வயது 34. சைவ உணவுப் பழக்கம் உள்ளவன். நார்ச்சத்துக்காக காய்கறிகளும், புரதச்சத்துக்காக பருப்பு உணவுகளும் எடுத்துக்கொள்ளும்படி என்னை மருத்துவர் அறிவுறுத்தினார். ஆனால், இந்த இரண்டுமே எனக்கு வயிற்று உப்புசத்தை ஏற்படுத்துகின்றன. அதனாலேயே இந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டியிருக்கிறது. எதைச் சாப்பிட்டாலும் வயிற்று உப்புசம் ஏற்படுவதைத் தடுக்க என்னதான் தீர்வு?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

நார்ச்சத்தும் புரதச்சத்தும் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதால் பலருக்கும் இப்படி வயிற்று உப்புசம் பிரச்னை ஏற்படுவதைப் பார்க்கிறோம். அந்தப் பிரச்னைக்கு பயந்துகொண்டே அவர்கள், இத்தகைய உணவுகளைத் தவிர்க்கிறார்கள். வயிற்று உப்புசம் என்பது அசௌகர்யமான ஓர் உணர்வை ஏற்படுத்தும் என்பதும் உண்மைதான்.
உங்களுடைய குடலில், இந்த நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தை செரிக்கும் பாக்டீரியா போதுமான அளவு இல்லாததே இந்த வயிற்று உப்புச பிரச்னைக்கு காரணம். வயிற்று உப்புசத்துக்கு பயந்துகொண்டு, இந்த உணவுகளை நீங்கள் அறவே தவிர்க்க ஆரம்பித்தால், உங்கள் குடல் இயக்க சமநிலை சரியாக இருக்காது. செரிமானமும் சரியாக இருக்காது. எனவே, உங்களுடைய உணவில், நார்ச்சத்துள்ள, புரதச்சத்துள்ள உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக்கொள்ள ஆரம்பியுங்கள். மருத்துவர் சொன்னதற்காக, ஒரே வேளையில், அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

சிறிது சிறிதாக எடுத்துப் பழகும்போது, அவற்றை செரிமானம் செய்யும் குடல் பாக்டீரியாக்கள் பேலன்ஸ் ஆகும். குறிப்பாக, வயிற்று உப்புசத்தைத் தவிர்க்க நினைப்பவர்கள், உணவை சிறு அளவுகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். சாப்பிட்டதும் பத்து நிமிடங்கள் வாக்கிங் போகலாம். பருப்பு, கடலை வகைகளை முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் முழுமையாகச் சமைத்துச் சாப்பிடுங்கள். ஆரம்ப நாள்களில், சமைக்காத, பச்சை உணவுகளைத் தவிருங்கள். பருப்பு வகைகளைச் சமைக்கும்போது, மேலே நுரைத்து வரும். அதை அகற்றிவிட்டுச் சாப்பிடுங்கள். இவையெல்லாம் சின்னச் சின்ன விஷயங்களாகத் தெரிந்தாலும், வயிற்று உப்புசம் பிரச்னையிலிருந்து பெரிய அளவில் நிவாரணம் தருவதை உணர்வீர்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.