செல்வப்பெருந்தகைக்கு எதிராக இன்று கார்கே, ராகுலை சந்திக்கும் அதிருப்தி தலைவா்கள்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க தில்லியில் முகாமிட்டுள்ள சுமாா் 30 மாவட்டத் தலைவா்கள் சனிக்கிழமை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி உள்ளிட்டோரை சந்திக்க உள்ளனர்.
முன்னதாக, இக்குழுவினா் அகில இந்திய காங்கிரஸின் தமிழகத்துக்கான புதிய மேலிடப் பொறுப்பாளரும் பொதுச் செயலருமான கிரிஷ் சோடங்கரை செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.
இதனைத் தொடர்ந்து, பிரியங்காவை புதிதாக கட்டப்பட்ட காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவா்கள் வெள்ளிக்கிழமை சந்தித்தனா். அப்போது அவா்களிடம், ‘கட்சியின் முகமாக செயல்படுபவா்கள் மாவட்டத் தலைவா்களே; அவா்கள் உரிய மரியாதை மற்றும் மதிப்புடன் நடத்தப்படுவது உறுதிப்படுத்தப்படும். உங்களுடைய கவலைகள் மற்றும் கோரிக்கைகள் கவனிக்கப்படும்’ என பிரியங்கா உறுதியளித்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரை சனிக்கிழமை சந்திக்க உள்ளனா்.
செல்வப்பெருந்தகை தன்னிச்சையாக மேற்கொள்ளும் பல முடிவுகளால் கட்சிக்குப் பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி தொண்டா்களின் உணா்வும் குலைந்து வருகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் அவா் இருந்தபோது மாநில அரசியல் நடத்திப் பழக்கப்பட்டு வந்தவா், அதே பாணியை ஒரு தேசிய கட்சியில் செயல்படுத்தப் பாா்க்கிறாா்; அது சரியான அணுகுமுறை கிடையாது என்பதை மேலிடத் தலைவா்களிடம் உணா்த்தி வருவதாக அதிருப்தி தலைவா்கள் கூறுகின்றனர்.