திரிணாமுல் காங். நிர்வாகி அடித்துக் கொலை!
மேற்கு வங்கத்தின் பிர்பூம் மாவட்டத்தில் திரிணாமுல் காங். நிர்வாகி ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.
பிர்பூம் மாவட்டத்தின் கன்கராத்தாலா பகுதியிலுள்ள பேருந்து நிறுத்ததின் அருகில் திரிணாமுல் காங். நிர்வாகியான ஷேக் நியாமுல் அவரது இரு சக்கர வாகனத்தில் நேற்று (பிப்.21) இரவு வந்துக்கொண்டிருந்தார். அப்போது, அவரது வாகனத்தை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஷேக் நியாமுலை கட்டைகளினாலும், கற்களினாலும் தாக்கியுள்ளனர். இதனால், அவர் படுகாயமடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக அவர் மீட்கப்பட்டு சியூரி சர்தார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து அவர் மேற் சிகிச்சைகாக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிக்க: ஜார்க்கண்ட்: ஆடு திருடியதாக இருவர் அடித்துக் கொலை
இந்நிலையில், ஷேக் நியாமுலின் சகோதரரும் திரிணாமுல் காங். நிர்வாகியுமான இனாமுல் ஷேக் என்பவர் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்காகப் பணியாற்றிய திரிணாமுல் காங். கட்சியின் மற்றொரு பிரிவினரால் நியாமுல் கொல்லப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த குற்றசாட்டை முழுவதுமாக மறுத்துள்ள அம்மாவட்ட திரிணாமுல். காங் அணியினர் வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கலவரத்தை தூண்டுவதற்காக பாஜகவினர் தான் இந்த கொலையை செய்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
ஆனால், இந்த குற்றசாட்டை மறுத்துள்ள பாஜக இந்த கொலையானது அம்மாநிலத்தின் சட்ட ஒழுங்கு நிலையை உணர்த்துவதாகத் தெரிவித்துள்ளது. இந்த கொலைக் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் கொலையாளிகளை பிடிக்கும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.