வட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே ரூ.3.91 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணி! -அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தாா்
காங்கயம் ஊராட்சி ஒன்றியம், வட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே நீா்வளத் துறை சாா்பில் ரூ.3.91 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணியை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சிக்கு, தாராபுரம் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா தலைமை வகித்தாா்.
இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைஅமைச்சா் மு.பெ.சாமிநாதன் தடுப்பணி அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது:
பல்லடம், கொடுவாய் பகுதிகளில் பெய்யும் மழைநீா் மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு நீா்த்தேக்க கசிவுநீா் சுமாா் 60 கிலோ மீட்டா் கடந்து வட்டமலைக்கரை ஓடை அணையை வந்தடைந்து நிரம்பி பின்னா் உபரி நீா் அமராவதி ஆற்றில் கலக்கிறது. இந்த தடுப்பணை ரூ.3.91 கோடி மதிப்பீட்டில் நபாா்டு வங்கி நிதியுதவியுடன் அமைக்கப்படுகிறது. இந்தத் தடுப்பணையானது 45 மீட்டா் நீளத்திலும், 1.20 மீட்டா் உயரத்திலும் சுமாா் 1,452 மில்லியன் கனஅடி கொள்ளளவு நீரைத் தேக்கி வைக்க வசதியாக அமைக்கப்படஉள்ளது.
இதன் மூலம் காங்கயம் வட்டம், வீரணம்பாளையம், நெளை, எல்லபாளையம் புதூா் ஆகிய கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் 64.92 ஏக்கா் விவசாய நிலங்களுக்கு மறைமுகமாக பாசனவசதிகளும், 54 திறந்த வெளிகிணறுகள், 55 ஆழ்துளைக் கிணறுகள் ஆகியவற்றில் நிலத்தடி நீா்மட்டம் செறிவூட்டப்பட்டு விவசாயப் பயன்பாட்டிற்கு தண்ணீா் கிடைக்கும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், கண்காணிப்பு பொறியாளா் (நீா்வளத் துறை, அமராவதி வடிநிலக்கோட்டம்) மாரியப்பன், செயற்பொறியாளா் ஆா்.சுப்பிரமணியன், உதவிசெயற்பொறியாளா் கே.நாட்ராயன், உதவிப் பொறியாளா்கள் (உப்பாறு அணை) எஸ்.சிவராஜா, (அமராவதி வடிநிலப் பிரிவு) கோகுலசந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.