தெருநாய்களால் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரிக்கை! காங்கயம் வட்டாட்சியரிடம் மனு
காங்கயம் பகுதியில் தெருநாய்களின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், நாய்க்கடியால் இறந்த கால்நடைகளுக்கு உரிப்பீடு வழங்க வலியுறுத்தியும் வட்டாட்சியரிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காங்கயம் வட்டாட்சியா் ஆா்.மோகனனிடம், புரட்சிகர இளைஞா் முன்னணியின் காங்கயம் பகுதி நிா்வாகி ப.கண்ணுசாமி அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
காங்கயம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 மாதங்களில் மட்டும் தெருநாய்கள் கடித்ததில் 800-க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் கோழிகள் உயிரிழந்துள்ளன.
குறிப்பாக பகவதிபாளையம், நத்தக்காடையூா், படியாண்டிபாளையம், சோழவலசு, ராசாபாளையம் போன்ற பகுதிகளில் கால்நடைகளை நாய்கள் கடித்து உயிா் இழப்பை ஏற்படுத்தியுள்ளன. காங்கயம், சிவன்மலை பகுதிகளில் பொதுமக்களையும் நாய்கள் கடித்துள்ளன.
எனவே, காங்கயம் பகுதியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்திடவும், இனப்பெருக்கத்தை தடுத்திடவும், உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.