விராலிமலை அருகே சாலை விபத்தில் இளைஞர் பலி!
விராலிமலை: விராலிமலை அருகே சாலை நடுவே கொட்டப்பட்டிருந்த மண்ணுக்குள் இருசக்கர வாகனம் பாய்ந்து தலையில் பலத்த காயமடைந்து இளைஞர் நிகழ்விடத்திலேயே பலியானார்.
விராலிமலை அடுத்துள்ள நாச்சிக்குறிச்சியை சேர்ந்த பன்னீர் மகன் ஆல்பர்ட்(30), வெளிநாட்டில் வேலை பார்த்துவந்த இவர், கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் தாயகம் திரும்பியுள்ளர். சிறிது நாள்கள் வீட்டில் இருந்த அவர், தற்போது விராலிமலை அடுத்துள்ள மாத்தூரில் இயங்கி வரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இதையும் படிக்க: செங்குன்றம்: மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி!
இந்த நிலையில், பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் இரவு 11 மணி அளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பேராம்பூர், நால்ரோடு இடையே சன்னாசி மலை அருகே சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், பாலம் கட்டுவதற்கு சாலை நடுவே கொட்டப்பட்டிருந்த மண்ணுக்குள் பாய்ந்தது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆல்பர்ட் நிகழ்விடத்திலேயே பலியானார். காலை பணிக்கு செல்லும் போது சாலையில் மண் இல்லாமல் இருந்தநிலையில் எந்தவித அறிவிப்பும் இன்றி திடீரென்று கொட்டப்பட்டிருந்த மண் குவியலால்தான் இந்த விபத்து நேரிட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தகவலறிந்த மாத்தூர் போலீஸார் சடலத்தை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.