அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர்சூட்டிய முதல்வர்!
கொளத்தூர் பெரியார் நகரில் புதிதாய் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக்கு பெரியார் அரசு மருத்துவமனை என்று பெயரிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
சென்னை கொளத்தூர், பெரியார் நகரில் அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் ரூ. 210 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். விரைவில் திறக்கப்படவுள்ள இப்புதிய மருத்துவமனைக்கு பெரியார் அரசு மருத்துவமனை என்று பெயர்சூட்டவும் முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
இப்புதிய மருத்துவமனையில் உள்ள மொத்த 6 தங்களில் தரைத்தளத்தில் 20 படுக்கைகள் கொண்ட விபத்து மற்றும் அவசரச் சிகிச்சை பிரிவுகள், எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி, புறநோயாளிகள் பிரிவுகளும், முதல் தளத்தில் மகப்பேறு பிரிவு, அறுவைச் சிகிச்சைப் பிரிவு, நவீன இரத்த வங்கியும், இரண்டாம் தளத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவுகள், மூன்றாம் தளத்தில் மகப்பேறு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு பிரிவு, நான்காம் தளத்தில் ஆண்கள் பொது மருத்துவப் பிரிவு, இரைப்பை குடலியல் பிரிவு, ஐந்தாம் தளத்தில் இதயவியல் பிரிவு, அறுவைச் சிகிச்சைப் பிரிவு, தோல்நோய் சிகிச்சைப் பிரிவு, ஆறாம் தளத்தில் சிறப்பு சிகிச்சை வார்டுகள், புற்றுநோயியல் பிரிவு, நரம்பியல் பிரிவு முதலான பல்வேறு பிரிவுகளுடன் மொத்தம் 260 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:தமிழக அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை!