நாடாளுமன்றத் தொகுதிகள் குறைக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
நாம் அளவோடு பெற்றதால்தான் நாடாளுமன்றத் தொகுதிகள் குறையும் சூழல் ஏற்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொளத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்லத் திருமண நிகழ்வில் அவர் பேசியதாவது, புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லி இருக்கும், “வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய்” இருந்து மணமக்கள் வாழ்க... வாழ்க என்று வாழ்த்துகிறேன்.
அதே நேரத்தில் மணமக்களை நான் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புவது, மணமகன் பெயரை, மணமகள் பெயரை நான் பார்க்கிறபோது, எனக்குக் கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது. ஏனென்றால் தமிழ்ப் பெயர்களாக இல்லை. இருந்தாலும் பரவாயில்லை, உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள். அதுதான் என்னுடைய அன்பான வேண்டுகோள்.
குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறபோது, உடனடியாக அதில் நீங்கள் இறங்கிவிட வேண்டாம். பொறுத்து, நிதானமாக - அளவோடு பெற்று வளமோடு வாழ வேண்டும் என்பது குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரசாரம்.
அதை நாம் தொடர்ந்து கடைபிடித்த காரணத்தினால்தான், இன்றைக்குத் தொகுதி மறுசீரமைப்பு வருகிறபோது, நாடாளுமன்றத் தொகுதிகள் குறைக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா: பிப்.26-ல் தொடக்கம்!
மும்மொழிக் கொள்கையை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இருமொழிக் கொள்கைதான் எங்களுக்கு வேண்டும் என்று சொல்லும் ஆற்றல் நாம் பெற்றோம். ஐந்தாயிரம் அல்ல, பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் நாங்கள் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதில் கையெழுத்து போட மாட்டேன் என்று நான் தெளிவாகச் சொல்லி இருக்கிறேன்.
நான் எதற்காகச் சொல்கிறேன் என்றால், நீங்கள் பெற்றுக் கொள்ளும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள். நிச்சயமாக என்னிடம்தான் கொண்டு வந்து பெயர் சூட்டச் சொல்லுவார்கள். அதுவும் எனக்குத் தெரியும். இங்கு சொன்னார்; எங்கள் வீட்டில் இரண்டாவது திருமண விழாவுக்கு வந்திருக்கிறார் என்று சொன்னார். இரண்டாவது மணவிழா மட்டுமல்ல, உங்கள் பேரன், பேத்தி திருமணத்திற்கும் நான்தான் வந்து வாழ்த்துவேன் என்றார்.