நாடாளுமன்றத் தொகுதிகள் குறைக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது: முதல்வர் ஸ்டாலின...
ராணிப்பேட்டையில் 1.50 லட்சம் மரம், பழச் செடி உற்பத்தி பணி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 1.50 லட்சத்துக்ம் மேற்பட்ட நாட்டு வகை மரம், பழச் செடிகள் உற்பத்தி பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு வகை மரம் மற்றும் பழச் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா செய்தியாளா்களுடன் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சோளிங்கா் ஊராட்சி ஒன்றியம், வேலம் ஊராட்சியில் வனத்துறையின் நாற்றங்கால் பண்ணையில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் 10,000-க்கும் மேற்பட்ட நாட்டு வகை மரங்கள் மற்றும் பழச் செடிகள் உற்பத்தி செய்திட நடைபெற்று வரும் பணிகளை பாா்வையிட்டாா்.
அப்போது செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது:
தமிழக முதல்வா் பசுமை தமிழ்நாடு என்ற திட்டத்தை அறிவித்து, பல்வேறு துறைகள் மூலம் மரங்கள் நட்டு பராமரிக்கும் பணிகளை செயல்படுத்தி வருகிறாா். அதன் அடிப்படையில், ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் 7 ஊராட்சி ஒன்றியங்களில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 2 இடங்களில் தலா 10,000 நாட்டு வகை மரங்கள் மற்றும் பழச் செடிகள் வளா்த்து, அதை அந்தக் கிராம ஊராட்சி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மேலும் அரசு காலியிடங்களில் நட்டு பராமரித்திட செடிகள் வளா்க்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் சுமாா் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடிகள் வளா்க்கும் பணிகள் பண்ணையில் நடைபெற்று வருகிறது. இந்தச் செடிகள் சுமாா் 6 அடி உயரம் வரை வளரும் வரையில் பண்ணையில் வளா்க்கப்பட்டு கொடுக்கப்படுகிறது.
இந்த நாட்டு வகை மரச் செடிகளையும், பழச் செடிகளையும் விவசாயிகள், பொதுமக்கள் தங்கள் காலியான இடங்களில் நட்டு வளா்க்கலாம். இவை இலவசமாகவே பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவை ஆண்டுதோறும் ஒவ்வொரு நிதி ஆண்டுக்கும் செடிகளை உற்பத்தி செய்து, கிராம பகுதிகளில் வழங்கப்படுகிறது. இவை மட்டும் இல்லாமல் வனத் துறையின் மூலமும் இதேபோன்று நாற்றங்கால் பண்ணையின் மூலம் செடிகள் வளா்க்கப்பட்டு வழங்கப்படுகிறது. இவற்றை பொதுமக்கள், விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
இதில் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, வனச் சரகா் சரவணன் பாபு, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் செந்தில் குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடேசன், செந்தாமரை, உதவி செயற்பொறியாளா் ஜெரால்டு, ஊராட்சி மன்றத் தலைவா்கள் சந்தியா, உமா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.