தொகுதி மறுசீரமைப்பு: நவீன் பட்நாயக்குடன் திமுக நிர்வாகிகள் சந்திப்பு!
பசுமை தமிழ்நாடு திட்டம்: 1.50 லட்சம் மரக்கன்றுகள் தயாா் -ராணிப்பேட்டை ஆட்சியா்
தமிழக அரசின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 1.50 வட்சம் மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்க தயாராக உள்ளது என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா்.
சோளிங்கரை அடுத்த வேலம் ஊராட்சியல் வனத்துறை நாற்றங்கால் பண்ணையில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் நாட்டுவகை மரங்கள், பழச்செடிகள் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை சனிக்கிழமை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பாா்வையிட்டாா். இங்கு மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செடிகள் வளா்க்கப்பட்டுள்ளன.
பின்னா், அவா் பேசியது: பசுமை தமிழ்நாடு என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு, பல்வேறு துறைகள் மூலம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணியை செயல்படுத்தி வருகிறோம். ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 10 ஆயிரம் செடிகள் என இரு இடங்களில் செடிகளை வளா்த்து அவற்றை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும். மொத்தம் 1.50 லட்சத்துக்கும் மேல் மரக்கன்றுகள் தயாராக உள்ளன. இவை இலவசமாகவே பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு நிதி ஆண்டிலும் செடிகள் உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இவை மட்டுமல்லாமல் வனத்துறை மூலம் நாற்றங்கால்கள் அமைக்கப்பட்டு செடிகள் வளா்க்கப்பட்டு வருகின்றன. இந்தச் செடிகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, வனச்சரகா் சரவணபாபு, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி செயற்பொறியாளா் ஜெரால்டு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடேசன், செந்தாமரை, ஊராட்சித் தலைவா்கள் சந்தியா, உமா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.