பகலில் தினக்கூலி, இரவில் கொலைகாரர்கள்! ஹம்பி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிர்ச்சி தகவல்!
பெங்களூரு : கர்நாடகத்தில் உள்ள சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தளமான ‘ஹம்பி’ இஸ்ரேல் தேசத்து பெண் சுற்றுலா பயணியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹம்பியில் நடந்தது என்ன?
ஹம்பிக்கு மார்ச் 6-ஆம் தேதி சென்றிருந்த இஸ்ரேல் நாட்டில் இருந்து வந்திருந்த 27 வயது பெண் உள்ளிட்ட சுற்றுலா குழுவினர், 3 ஆண்கள்(அமெரிக்காவை சேர்ந்த ஒருவர், மகாராஷ்டிரம், ஒடிஸாவை சேர்ந்த ஒருவர்), 2 பெண்கள்(ஒரு இஸ்ரேலியப் பெண்மணி மற்றும் ஹம்பியிலுள்ள விடுதி மேலாளர்) உள்பட மொத்தம் 5 பேர், கடந்த வியாழக்கிழமை இரவு உணவருந்தியபின் தாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து புறப்பட்டு ஹம்பியில் உள்ள சநாபூர் ஏரியை பார்வையிடச் சென்றிருந்தனர்.
அப்போது, அங்கே இரவு 11 மணியளவில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று, துங்கபத்ரா கால்வாயோரம் இருந்த சுற்றுலா பயணிகளை வழிமறித்து தாக்கியுள்ளது.
அவர்கள் மூவரும் சேர்ந்து, ஒடிஸாவை சேர்ந்த பிபாஷை சரமாரியாக அடித்து துன்புறுத்தியதுடன் அவரை துங்கபத்ரா கால்வாயில் வீசிச் சென்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதன்பின் அவர்கள், அங்கிருந்த இஸ்ரேலியப் பெண்மணியையும் அவருடன் துணையாக வந்திருந்த விடுதி மேலாளர் பெண்மணியையும் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இந்த நிலையில், அவர்களால் கால்வாயில் தள்ளிவிடப்பட்டாலும் நீந்தி கரை சேர்ந்த அமெரிக்காவை சேர்ந்த டேனியலும், மகாராஷ்டிரத்தை சேர்ந்த பங்கஜும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துக் கொண்டனர்.
இந்த குற்றச் செயலில் தொடர்புடைய இருவர் மார்ச் 8 கைது செய்யப்பட்ட நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட மூன்றாவது நபரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளாா். தினக்கூலி ஊழியர்களான கங்காவதியைச் சேர்ந்த சாய் மல்லு, சேத்தன் சாய் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது நபரான ஷரனா பசவாவை சென்னையில் கர்நாடக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேற்கண்ட மூவரும் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டிருப்பதாக கர்நாடக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கண்ட குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் ஏற்கெனவே பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையவர்கள் என்று காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பகலில் தினசரி சம்பளம் பெற்று பிழைப்பு நடத்தும் தொழிலாளிகளாக பொதுவெளியில் தங்களைக் அடையாளப்படுத்திக்கொள்ளும் இவர்கள், இரவில் பல்வேறு சட்ட விரோதச் செயல்களில் அதிலும் குறிப்பாக, கொள்ளை, பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், சம்பவத்தன்று மேற்கண்ட மூவரும் அந்தப் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்ததுடன், அங்கு சுற்றுலா பயணிகளுடன் வந்திருந்த விடுதி உரிமையாளர் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியதுடன், அவரையும், இஸ்ரேல் நாட்டுப் பெண்ணையும் தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.