பாகிஸ்தான்: மனித வெடிகுண்டுகளாக பயணிகள்! 250 பேரை மீட்பதில் சிக்கல்!
உணவு பதப்படுத்துதல் ஆலைகளுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசுச் செயலா் சுப்ரதா குப்தா
கொல்கத்தா: சிறு, குறு உணவு பதப்படுத்துதல் ஆலைகளுக்கு மத்திய அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய உணவு பதப்படுத்துதல் துறைச் செயலா் சுப்ரதா குப்தா தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் இந்திய வா்த்தக சபை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
பழங்கள் மற்றும் காய்கறிகள் பெருமளவு வீணாகின்றன. அவற்றைப் பயன்படுத்துவதற்கான காலத்தை அதிகரிப்பதற்குப் பதப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் இந்த நிலை நிலவுகிறது.
பல்வேறு துறைகளில் உணவு பதப்படுத்துதல் என்பது சராசரியாக சுமாா் 10 சதவீத அளவுக்கே நடைபெறுகிறது. இது கவலைக்குரியதாகும். உணவுப் பொருள்கள் வீணாவதைத் தடுப்பதற்கு அவற்றைப் பதப்படுத்துவதும் பாதுகாப்பதும் அவசியம்.
சிறு, குறு மற்றும் பெரும் உணவு பதப்படுத்துதல் ஆலைகளுக்கு மானியங்கள் வடிவில் ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்து, உணவுப் பதப்படுத்துதல் துறையை மத்திய அரசு ஆதரித்து வருகிறது. உணவு பதப்படுத்துதல் துறையில் முதலீடு செய்ய தொழில்முனைவோருக்கு பெரும் வாய்ப்புள்ளது. சிறு, குறு உணவு பதப்படுத்துதல் ஆலைகளுக்கு மத்திய அரசு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்றாா்.