செய்திகள் :

Symphony: ’இசை நடனமாடும் மேடை; இத்தாலி டு பண்ணைப்புரம்’ - இது சிம்பொனி இசை பயணித்த பாதை

post image

இளையராஜா... அவரது திறமைக்கும் அவர் நமக்கு ஊட்டிய இசையமுதுக்கும் ‘ராஜா’ என்ற பெயர்தான் பொருத்தமானதாக இருக்கிறது. எல்லா புகழையும் அன்பையும் பெற்றபிறகும், தலைமுறைகள் கடந்த ரசிகர்களைப் பெற்றபிறகும், ராஜா உளமார ஒன்றைப் படைக்கிறார்… துள்ளிக் குதிக்காத குறைக்குக் குழந்தையைப் போல மகிழ்கிறார்… அதுதான் `சிம்பொனி’ இசை!

சிம்பொனி

சிம்பொனி என்பது இசைக்குழு முழுக்க முழுக்க மேடையை எடுத்துக்கொண்டு ஒத்திசையாக விருந்தளிக்கும் ஒரு இசை வடிவம். ஒரு சில சிம்பொனியில் மட்டும்தான் பாடகர்களின் குரல் பயன்படுத்தப்பட்டிருக்கும். உதாரணமாக பீத்தோவானின் சிம்பொனி எண்.9 மற்றும் குஸ்தாவ் மஹ்லெரின் சிம்பொனி எண்.2 போன்றவை. 

Ilayaraja Symphony

மேற்கத்திய இசை வடிவமான சிம்பொனி, நம் ஊருக்குப் புதிது என்பதனால் நம்மால் அதனுடன் ஒட்டிக்கொள்ள முடியாது என்பதில்லை. இசைதான் உலக மொழியாயிற்றே. நீங்கள் பாடல்களின் இடையில் வரும் இன்டெர்லூட் இசையை விரும்பி கேட்பவர்களாக இருந்தால்… நிச்சயம் உங்களால் சிம்பொனியை உள்வாங்கவும் மெய் சிலிர்க்கவும் மெய் மறக்கவும் முடியும்! 

உதாரணமாக, `சுந்தரி கண்ணால் ஒரு செய்தி’ பாடலில், போர் பின்னணியுடன் நீளும் இசை உங்களை ஒரு நிமிடத்தில் உத்வேகமாகவும், பரிதாபகரமாகவும் உணரவைக்கும். இதுவே 45 நிமிடம் நீண்டு பல்வேறு உணர்வு எழுச்சிகளுக்குள் இசை உங்களைத் திருமுழுக்கு கொடுப்பதுபோல மூழ்கவைத்து எழுப்பு கலைவடிவம்தான் சிம்பொனி. இப்போதெல்லாம் படங்களின் ஓ.எஸ்.டி இசையை மீண்டும் மீண்டும் கேட்கும் ரசிகர்கள் உள்ளனர். அவர்களுக்கு சிம்பொனி இசை ஒரு வரம்.

சிம்பொனி குறித்து ஒரு மேடையில் இளையராஜா, `நான்கு கவிஞர்களின் நான்கு கவிதைகளை ஒரே நேரத்தில் கேட்பதைப் போன்றது’ என விளக்கியிருப்பார். அதாவது ஒவ்வொரு இசைக்கருவியும் ஒரு கவிதையை வடிக்கிறது, கவிதைகள் ஒன்றின் மீது ஒன்றாக வரி வரியாகப் பிணைந்து மனதுக்குள் ஒரு ரூபத்தை எழுப்புகிறது. 

எல்லா கலைகளையும் போல மனித நுண் உணர்வுகளை தூண்டுவும் ஆசுவாசப்படுத்துவதும்தான் சிம்பொனியின் சிறப்பு!

சிம்பொனி வரலாறு

சிம்பொனியா என்ற கிரேக்க வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் உள்ளன. அதிலொன்று “ஓசைகளின் ஒத்திசைவு”. இந்த வார்த்தையிலிருந்துதான் இன்று பயன்படுத்தும் சிம்பொனி என்ற வார்த்தை உருவாகியிருக்கிறது என்றாலும், வரலாற்றில் இந்த வார்த்தை அதிக தூரம் பயணித்துள்ளது. 

Music Concert

கி.பி 500-களில் செவில்லின் பேராயர் இசிடோர் இரண்டு தலைகள் கொண்ட ட்ரம்ஸை சிம்பொனி என அழைத்தார். 1100 முதல் 1300 வரை இன்று hurdy-gurdy என அழைக்கப்படும் இசைக்கருவியை சிம்பொனி என அழைத்தனர். இடைக்கால இங்கிலாந்தில் Dulcimer என்ற நரம்பிசைக் கருவியையும் சிம்பொனி என அழைத்தனர். 1500கள் முதல் தங்களது இசைக் கோர்வையின் பெயரில் சிம்பொனி என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர். 

ஜியோவானி கேப்ரியேலி (1557-1612) 1597-ல் சாக்ராய் சிம்போனியை (Sacrai symphoniae) முடித்தார் மற்றும் கேப்ரியலியின் மாணவரான ஹென்ரிச் ஷூட்ஸ் (1585-1672) 1629-ல் சிம்போனியா சாக்ரேயை (Symphoniae sacrae) எழுதினார். சிம்பொனி எனப் பெயர் இருந்தாலும், இவை இப்போது இருப்பதுபோல வாத்தியங்களின் ஒலிக் கோர்ப்பாக இல்லாமல் பாடகர்களால் பாடப்பட்டது. சிலவற்றில் மட்டுமே இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. 

பரோக் காலம் (Baroque Period)

இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளில் உள்ள நிலப் பிரபுக்கள் தங்களுக்கென சொந்தமான இசைக் குழுக்களை உருவாக்கி, அவர்களை புதிய சிம்பொனிகள் இசைக்கச் செய்தனர்.

மேற்கு உலகின் கட்டிடக்கலை, நடனம், ஓவியம், சிற்பம், கவிதை என எல்லா கலைவடிவங்களும் செழித்து வளர்ந்த 17ம் நூற்றாண்டை பரோக் காலம் என்கின்றனர். அந்த காலகட்டத்தில்தான் வாத்தியங்களிலிருந்து நீண்டநேரம் இசைப்பதை சிம்ஃபோனியா என அழைக்கத்தொடங்கினர்.

ஆரம்பத்தில் ஒபேரா (இசை, பாடல் மூலம் கதை சொல்லல்), கான்சர்டோ (இசை நிகழ்ச்சி) மற்றும் சொனாட்டா (ஒரே இசைக்கருவி மூலம் இசைக்கப்படும் நீண்ட இசைக் கோர்வை) எல்லாமும் சிம்ஃபோனியா என்றே அழைக்கப்பட்டது. சொனாட்டாக்கள் சிம்பொனிக்கான ப்ளூ பிரிண்டாக அமைந்தது.

அங்கிருந்து தனித்துவமாக மூன்று பகுதிகளைக் கொண்ட Italian overture என்ற வடிவத்தை அடைந்தது. முதல் பகுதி வேகமான தொடக்கமாகவும், இரண்டாம் பகுதி சொற்களுடன் மெதுவாகவும், மூன்றாம் பகுதி நடனமாடுவதற்கு ஏற்றதுபோல துள்ளலாகவும் இருக்கும். இந்த வகைமைதான் பரோக் காலத்தைத் தொடர்ந்து வந்த க்ளாசிக் காலத்தில் சிம்பொனியாக உருவானது.

Music Concert

பரோக் காலத்தில் எந்தெந்த கருவிகள் எங்கெங்கு இடம்பெற வேண்டும் என்பதற்கு எவ்வித வழிகாட்டலும் இல்லை என்கிறார்கள். இசையமைப்பாளர்கள் பல குழுக்களாக இணைந்து பாடினர். எந்த இசைக்கருவியும் எந்த கருவியுடனும் இணைந்து இயக்கப்படும். 

1700களில் இத்தாலியன் நெப்போலிட்டன் பள்ளியில் சிம்போனி முதலில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. ஆஸ்திரிய இசையமைப்பாளர் ஜோசப் ஹைடன் (Joseph Haydn) இன்று வாசிக்கப்படும் 4 பகுதிகள் கொண்ட சிம்பொனியின் தந்தை என அறியப்படுகிறார். 

18-ம் நூற்றாண்டில் சிம்பொனி மிக முக்கியமான இசை வடிவமாக வளர்ந்தது. இசை நிகழ்ச்சிகளில் பிரதானமாக சிம்பொனிகள் இசைக்கப்பட்டன. தேவாலய பூஜைகளில் சிம்பொனி இசைக்கப்பட்டது. 

இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகளில் உள்ள நிலப் பிரபுக்கள் தங்களுக்கென சொந்தமான இசைக் குழுக்களை உருவாக்கி, அவர்களை புதிய சிம்பொனிகள் இசைக்கச் செய்தனர். சிம்பொனியின் ஆதிக்கத்தில் நடன அரங்குகள் இசைக்குழுக்களுக்கான அரங்குகளாக மாறின.

க்ளாசிகல் காலம்

தொடக்கக் காலத்தில் வந்த சிம்பொனிகள் நரம்பிசைக் கருவிகளை மட்டுமே கொண்டிருந்தன. அவை நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். முதல் மற்றும் இரண்டாம் பகுதியில்  வயலின் வயோலாவுடன் செல்லோ, டபுள்பேஸ் இசையில் பாஸ் லைன் இருக்கும்.

மெதுவாக இசையமைப்பாளர்பாளர்கள் தங்களது ஆர்கெஸ்டாவில் கருவிகளைச் சேர்த்தனர். ஹார்ன், குழல், நாதஸ்வரம் போன்ற கிளாரினெட்கள், ஓபேஸ், முரசு போன்றவை சிம்பொனியில் இடம்பெற்றன. இப்படி வாத்தியங்களை இணைப்பதுவே நிலையான வடிவமாக மாறியது. 

இந்த காலகட்டத்தில் இசையமைப்பாளர்கள் தங்கள் மனதிலேயே ஒவ்வொரு கருவியின் இசையையும் கற்பனை செய்து எழுதியதால், இருக்கும் வாத்தியங்களைப் பின்னி இசைக் கோர்வையை உருவாக்கும் முறை ஒழிந்து சரியான வாத்தியங்கள் மட்டுமே பயன்படுத்தும் முறை வந்தது. 

Joseph Hydn

ஜோசப் ஹைடனின் முதல் 30 சிம்பொனிகள் Italian overture வடிவத்தின்படி மூன்று பகுதிகளைக் கொண்டதாகவே இருந்தன. மொசார்ட்டின் முதல் சிம்பொனியும் 3 பகுதிகளையேக் கொண்டிருக்கும். காலப்போக்கில் இசை நிபுணர்கள் 4 பகுதிகளாக அமைக்கும் நிலையான வடிவத்தை எட்டினர். 

க்ளாசிக்கல் காலகட்டத்தின் முடிவில் இசையின் மேன்மையான வடிவமாக சிம்பொனி உயர்ந்தது. அழகான மெல்லிசைகளுடன் கூடிய நீளமான சிம்பொனிகளை எழுதினர். 10 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் 50 நிமிடங்கள் வரை பல்வேறு நீளங்களில் சிம்பொனிகள் உள்ளன. 

ரசிகர்களை ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்படுத்த ஒவ்வொரு இசைக்கருவிகளையும் ஒத்திசையச் செய்து புதிய ஓசைகளை வழங்கினர். வாத்திய கருவிகளை இசைக்கும் ஒவ்வொரு நுட்பத்தையும் சிம்பொனியில் பயன்படுத்தினர். இதனால் உலகம் முழுவதுமே திரையில், இன்றளவும் க்ளாசிக்கல் சிம்பொனிகளின் இசைக்கோர்வைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்த புதுமைகளிலும், இசைக்கும் மனித உணர்வுகளுக்குமான தொடர்புகளைப் பயன்படுத்தி தேர்ந்த நிபுணர்கள் லெஜண்ட்களாக உருவாகினர். மொசார்டின் சிம்பொனி எண். 41 ஜூபிட்டர், ஹைடனின் சிம்பொனி எண்.101 தி க்ளாக், 103 ட்ரம்ரோல் ஆகிய சிம்பொனிகளில் க்ளாசிக்கல் மேதைமையைக் காணலாம் என்கிறார்கள் இசை ஆர்வலர்கள்.

1800-ல் பீத்தோவான் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றினார். 1802ல் இரண்டாவது. ஹைடன், மொசார்ட்டை பின்பற்றி 4 பகுதிகள் கொண்ட சிம்பொனியை அமைத்தாலும் 1804ல் அவரது மூன்றாவது சிம்பொனியில் முற்றிலும் புதிய ஒன்றைச் செய்தார். அதுவரை இல்லாத அளவில் 45 நிமிடம் நீளமான சிம்பொனியை உருவாக்கினார். 

பீத்தோவான் சிம்பொனிகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்தார். அதன் சாத்தியங்களை செயல்முறையாக்கினார்.

ரசிகர்களுக்கு முற்றிலும் புதுமையாக பல்வேறு இசைவடிவங்களை கோர்தார். எதிர்பாராத நேரத்தில் உணர்ச்சித் திருப்பங்களை மேற்கொண்டார். இசையின் வேகம் எப்போதும் நிலைகொள்ளாமல் இருப்பது சிம்பொனியின் நாடகத்தன்மையை மேம்படுத்தியது. இந்த சிம்பொனி எண்.3-ஐ நெப்போலியன் போனபர்டுக்கு சமர்ப்பித்தார் பீத்தோவான். 

பீத்தோவானுக்கு 26 வயதில் செவிக் குறைபாடு ஏற்பட்டது. நாற்பதுகளில் முழுவதுமாக கேட்கும் திறனை இழந்த பிறகும் மாஸ்டர் பீஸ் சிம்பொனிகளை எழுதினார். அதனால்தான் இசையை விரும்பும் ஒவ்வொருவருக்கும் அவர் லெஜண்ட்!

beethoven statue

அடுத்தடுத்து அவர் இசையமைத்த ஒவ்வொரு சிம்பொனியும் இசையுலகில் கலகத்தை ஏற்படுத்தின. குறிப்பாக அவரது 5வது சிம்பொனி மிகப் பெரிய அளவில் பிரபலமடைந்தது. இன்றுவரை நாமும் ஏதோ ஒரு தருணத்தில் அதன் தொடக்கத்தைக் கேட்டிருக்கக் கூடும். உலகப் புகழ்பெற்ற ஸ்டார்வார்ஸ் முதல் பல்வேறு திரைப்படங்களில் அது பயன்படுத்தப்பட்டுள்ளது. 

அவரின் ஆறாவது சிம்பொனி சடங்கார்த்தமான 4 பகுதிகளை மீறி 5 பகுதிகளுடன் வெளியானது. அது வார்த்தைகள் இல்லாமல் கதை சொல்லும் வகையில், பறவைகள் சத்தமும் புயல் சத்தமும் இசைக் கருவிகளால் உருவாக்கப்பட்டிருக்கும். 

சிம்பொனி எண்.9ல் தனிப்பாடகர் குரலையும் கோரஸையும் பயன்படுத்தியிருப்பார். அதுவரை சிம்பொனிகளில் குரல் பயன்படுத்தப்படவில்லை. இப்போதும் க்ளாசிக்கல் இசையின் சிறந்த பகுதியாக அந்த கோரஸ் நினைவுகூறப்படுகிறது. 

பீத்தோவான் சிம்பொனிகளின் எல்லை விரிவாக்கம் செய்தார். அதன் சாத்தியங்களை செயல்முறையாக்கினார். அவரது இருப்பினால் அடுத்தடுத்த தலைமுறைகளில் தோன்றிய இசையமைப்பாளர்களால் குறிப்பிட்ட சட்டகத்துக்குள் இல்லாமல் கிரியேட்டிவான சிம்பொனிகளை உருவாக்க முடிந்தது. 

பீத்தோவானின் சிம்பொனிகளை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு பல சிம்பொனிகள் உருவாகின. ஃபிரான்ஸ் ஷூபர்ட், பெலிக்ஸ் மெண்டெல்சோன் , மற்றும் ராபர்ட் ஷூமன் ஆகியோரின் சிம்பொனிகள் அதில் முக்கியமானவை. அவரை விடச் சிறந்த சிம்பொனி அமைப்பதற்கான இசைப் போட்டி நடந்துகொண்டே இருக்கிறது. 

பீத்தோவனுக்கு அடுத்த தலைமுறையாக ஜோஹன்னஸ் பிராம்ஸ் (1833-1897), அன்டன் ப்ரூக்னர் (1824-2896), பைட்டர் சாய்கோவ்ஸ்கி (1840-1893), மற்றும் அன்டோனின் டுவோராக் (1841-1904) போன்ற இசையமைப்பாளர்கள் தோன்றினர். ஆனால் லெஜண்டுகளின் வரிசையில் இடம் பிடித்தவர், குஸ்டாவ் மாலர் (Gustav Mahler, 1860-1911).

Gustav Mahler

நீளமான பிரமாண்டமான சிம்பொனிகளைப் படைத்தார் மாலர். மாலரின் எட்டாவது சிம்பொனியை இசைக்க மிகப் பெரிய இசைக்குழு, தனிப்பாடகர்கள், குழு பாடகர்கள் தேவை என்பதனால் ஆயிரம் பேரின் சிம்பொனி என அதற்குச் சிறப்புப் பெயர் உண்டு. 

பாப் இசை, நாட்டுப்புற இசை மற்றும் அவரது சொந்த பாடல்களை சிம்பொனியில் இசைத்து அற்புதமான கோர்வைகளை உருவாக்கினார் மாலர். 

20ம் நூற்றாண்டில் இசையமைப்பாளர்கள் எல்லா கட்டுப்பாடுகளையும் உடைத்தனர். கார்ல் நீல்சன் (1865-1931) மற்றும் டிமிட்ரி ஷோஸ்டகோவிச் (1906-1975) போன்றவர்கள் பாரம்பரியமான முறையில் நான்கு பகுதிகளைக் கொண்ட சிம்பொனியை இசைத்தனர். 21ம் நூற்றாண்டில் இளையராஜாவும் அதையே செய்கிறார். 

ஷோஸ்டகோவிச் சிம்பொனியில் கவிதைகள், ரஷ்ய அரசியல், மக்களின் வேதனைகள் தாக்கம் செலுத்தின. இரண்டாம் உலகப்போரில் ஒரு நகர முற்றுகையிலிருந்து ஷோஸ்டகோவிச் தப்பியபோது அவரது 7வது சிம்பொனியை எழுதியுள்ளார். பல கடினமான சூழல்களைத் தாண்டி மொத்தமாக 15 சிம்பொனிகளை எழுதியுள்ளார். 

சிம்பொனியை இன்னும் பல வழிகளில் கையாள முயன்றனர். ஜெர்மனியைச் சேர்ந்த அர்னால்ட் ஷொயன்பெர்க், நான்கு பகுதியாக இல்லாமல்  ஒரே பகுதியாகத் தனது சிம்பொனியை எழுதினார்.  பல ஜெர்மானிய இசையமைப்பாளர்கள் இவரைத் தொடர்ந்து ஒரே பகுதியாக சிம்பொனி எழுதினர். 

Symphony Music

இதுவரை எழுதப்பட்ட பெரும்பாலான சிம்பொனிகள் ஐரோப்பியர்களாலேயே எழுதப்பட்டுள்ளன. அமெரிக்கர்கள், ஆப்ரோ அமெரிக்கர்கள் குறைவாகவே சிம்பொனி இயற்றியுள்ளனர். ஆசியாவில் ரஷ்யர்கள் அதிக சிம்பொனிகளை இயற்றியுள்ளனர். 

1722 முதல் 2025 வரை எழுதப்பட்ட ஒவ்வொரு சிம்பொனியிலும் இசையமைப்பாளர் தனது புதிய ஐடியாவை உருவாக்க முயற்சி செய்துள்ளார். எப்போதும் புதுமைக்கான இடம் சிம்பொனியில் உள்ளது. அதில் ராஜா தனது பங்கை நிரப்பியிருக்கிறார். 

Valiant Symphony Live Experience

வாலியண்ட் என்றால் மெஜஸ்டிக், அதாவது கம்பீரமான என்று பொருள். லண்டனில் ராஜாவின் வாலியண்ட் சிம்பொனியை நேரில் பார்த்து மகிழ்ந்த மௌரிஷிடம் பேசியபோது, அவரது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

“செண்டர் லண்டனில் உள்ள hammersmith apollo என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆடிடோரியத்தில் நடைபெற்றது. இது The Beatles, The Rolling Stones, Pink Floyd, போன்ற புகழ்பெற்ற இசைக்குழுக்கள் இசை நிகழ்ச்சி நடத்திய இடம். காலை 7:30க்கு உள்ளே நுழைந்தேன். 3500 பேருக்கு இடமுள்ள அரங்கு அது.

சிம்பொனி இசை நிகழ்ச்சி என்றாலும் அரங்கம் தமிழர்களாலேயே நிறைந்திருந்தது. தொடக்கத்திலேயே நீலநிற கோட்சூட்டுடன் மேடையேறிவிட்டார் ராஜா. வாலியண்ட் தொடங்குவதற்கு முன்பாக ரஷ்ய இசையமைப்பாளர் ஷோஸ்டகோவிசின் சிம்பொனியை வாசித்தனர்.

“This is the Most Important Day in My Life”

7 நிமிடங்கள் நடந்த இசையாடல்தான் எனக்கு சிம்பொனியை அறிமுகம் செய்தது. கீ போர்ட், கிட்டார், ட்ரம்ஸ் போன்ற பாப் இசை சத்தங்களைக் கேட்டுப் பழகிய காதுகளுக்கு நரம்பிசைக் கருவிகளான வயலின், செல்லோ, பாஸ், குழல் எல்லாமும் புதிதாக இருந்தன. ஃப்ரெஷ்ஷான அனுபவத்துக்கு என்னைத் தயார்ப்படுத்திக்கொண்டேன். 

Ilayaraja Valiant

எனக்குப் பெரிய இசை ஞானம் இல்லாவிட்டாலும் இளையராஜாவின் மீதான பற்றுதல்தான் அங்குக் கூட்டிச் சென்றது. பொதுவாக ராஜாவின் இசை நிகழ்ச்சிகளில் அவரது பேச்சே தனி சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் இந்த நிகழ்ச்சியில் அவர் அதிகம் பேசவில்லை. 

முதல் வார்த்தையாக, “This is the Most Important Day in My Life” என்றார். இத்தனைக் எமோஷனலான ராஜாவை இதுவரைப் பார்த்ததில்லை. அவருக்கு மேடையிலேயே இருக்கை இருந்தது. சிம்பொனியை மிக்கேல் தாம்ஸ் என்பவர் நடத்தினார். அவர் ஒரு நோட் கூட மிஸ்பண்ணாத கெட்டிக்காரர் என மிக்கேல் தாம்ஸை பாராட்டி பேசினார் . 

வழக்கமான சிம்பொனி போல நான்கு பகுதிகளாக இருந்தது. முதல் பகுதியில் எதுவுமே புரியாததுபோல இருந்தது. ஒவ்வொரு வாத்தியத்தின் சத்தத்தையும் இணைக்கும் மெட்டு பிடிபடாததுபோல இருந்தது. ஒரு சிம்பொனியை எப்படிக் கேட்பதெனத் தெரியாததின் விளைவு இது என நினைக்கிறேன்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் பகுதிகள் மிகவும் பிடித்திருந்தது. நான்காவது பகுதி கொஞ்சம் பரிட்சியமான இசையாக இருந்தது. பொதுவாக சிம்பொனி நடக்கும்போது நான்கு பகுதிகளும் முடிந்த பிறகுதான் கைதட்டுவார்களாம். ஆனால் ராஜாவின் சிம்பொனியில் ஒவ்வொரு பகுதிக்கும் கைதட்டல் குவிந்தது.  ஆரம்பத்தில் ரசிகர்கள் சத்தமிட்டதை அவரே செல்லமாக சத்தமிட்டுத்தான் அடக்கினார். 

உலகத்தரமான இசைக்கலைஞர்கள் வாசித்த 46 நிமிட சிம்பொனியில் சோகம், துள்ளல், மிரட்டல், கம்பீரம், மென்மை என அனைத்து உணர்வுகளும் கலந்து தாக்கின. 

சிம்பொனியைத் தொடர்ந்து ராஜாவின் மற்றொரு பாடல், சினிமா பாடல்கள் என வாசித்தனர். ராஜாவின் பாடல்களில் சின்ன நோட் மாறினால் கூட திரும்ப வாசிக்கச் சொல்வார், ஆனால் இங்கு இருக்கும் கருவிகளை வைத்து வாசிக்க வேண்டியிருந்தது. ராஜா இதயம் போகுதே பாடலை பாடினார், அவ்வளவு உருக்கமான பாடலை அவர் பாடக் கேட்பது அலாதியாக இருந்தது. 

அரங்கிலிருந்து வெளியேறும்போது வந்த இனம்புரியாத உணர்வு இப்போதும் என்னை ஆட்கொண்டிருக்கிறது." என்றார்.

சிம்பொனியை ரசிப்பது எப்படி?

உண்மையில் எந்த இசையையும் நாம் அனுபவிக்கும்போது இப்படித்தான் ரசிக்க வேண்டும் எனச் சொல்வது சரியானதல்ல. எனினும் நாம் அன்றாடம் கேட்கும் பாடல்களிலிருந்து சிம்பொனி இசை முற்றிலும் வேறுபட்டது என்பதனால் நாம் அதற்கான மனநிலையுடன் அமர வேண்டும்.

நாம் ஒருவிஷயத்துக்குக் கவனம் கொடுக்கும் நேரம் மிகவும் குறைந்துவிட்டது. அதனால்தான் இன்றைய பாப் பாடல்கள் எல்லாமும் 3-4 நிமிடங்கள் மட்டுமே இருக்கின்றன. 40 நிமிடங்கள் ஓடும் இசையை இடைவிடாது திசை திரும்பாது கேட்பது என்பது எல்லாருக்குமே முதல்முறை வாய்த்துவிடும் திறமை அல்ல. அது ஒரு கவிதையைப் படிப்பதுபோன்றது… வார்த்தைகளை மட்டும் படித்தால் போதாது, அர்த்தத்தை அனுபவிக்க ஒன்றுக்கு இரண்டுமுறை வாசிக்க நேரிடும் அல்லவா!

Symphony

பலரும் க்ளாசிக் இசையைப் பழையது என ஒதுக்குகின்றனர். சில மிகவும் சலிப்பானது என்கின்றனர். உண்மையில் இசை எக்காலத்துக்குமான ஒரு மொழி அது பழைமை அடைவதில்லை. 

சிம்பொனி இசையைக் கேட்கத் தொடங்குகின்றவர்கள் ஆக்டிவாக (Active) கேட்க வேண்டும். பாஸ்ஸிவாக (Passive) அல்ல! நாம் தினமும் கேட்கும் சினிமா, பாப் பாடல்களில் ஒரே மாதிரியான ஒலிக்கோர்வை பின்னணியில் ஓட, வார்த்தைகளில்தான் பாடலின் எமோஷன் இருக்கும். ஆனால் சிம்பொனியில் இசையில்தான் உணர்வுகளின் ஊடல் இருக்கும்.

நீங்கள் வெளிநாடுகளில் வசிப்பவராக இருந்தால் சிம்பொனியை நேரில் சென்று ரசிக்கலாம். அது பேரனுபவமாக இருக்கும். வீட்டிலிருந்து கேட்பவர்கள் நல்ல ஸ்பீக்கரில் கேட்பது சிறப்பு. ஏனென்றால் ஒன்றின் மேல் ஒன்று பிணைந்த 4-5 இசைக்கருவிகளின் சத்தத்தையும் தெளிவாகக் கேட்கும்போதுதான் சிம்பொனி சரியாகக் கடத்தப்படும். இல்லையென்றால் ஏற்ற இறக்கங்களுடன் கூடிய இரைச்சல்தான் மிஞ்சும். 

ஊரே மாஸ்டர் பீஸ் எனக் கொண்டாடும் ஒரு சிம்பொனி நமக்கு ஒன்றுமில்லாததாகத் தோன்றலாம். அதற்குப் பல காரணங்கள் இருக்கக் கூடும். ஆனால் நாம் மீண்டும் மீண்டும் அதைக் கேட்பதன் மூலம் அந்தக் கலைஞரின் கருத்தை அறியமுடியும். 

symphony

நிச்சயமாக நாம் பாப், சினிமா பாடல்கள் கேட்பதுபோல சிம்பொனி இசையைக் கேட்கமுடியாது. சிம்பொனி நம்முடன் தனிப்பட்ட முறையில் உரையாடக் கூடிய இசைவடிவம். நம் உணர்வுகளைக் கிளரச்செய்து நமக்கு அடையாளம் காட்டும் திறன் இசைக்கு உள்ளது. பாப் இசைக் கேட்கும்போது உங்கள் கால்கள் தானாக ஆடத் தொடங்கும். பீட்ஸுக்கு ஏற்றதுபோல உடலை அசைப்பதுதான் பாப் இசையை ரசிப்பதற்குச் சரியான வழி. ஆனால் சிம்பொனியில் இசை நடனமாடுவதை நாம் அமர்ந்து பார்க்க வேண்டும். 

Clasical Music

க்ளாசிகல் இசைக் கேட்பது மன அழுத்தத்தைக் குறைக்கும். சில மருத்துவ அறுவைசிகிச்சைகளின்போது கூட க்ளாசிக்கல் மீயுசிக் கேட்பதைப் பரிந்துரைக்கின்றனர். 

சிம்பொனி க்ளாசிகல் இசையின் மிகவும் மேன்மையான வடிவமாகப் பார்க்கப்படுகிறது. சிம்பொனியை ரசிக்கப் பழகுவதோ, உலக ஜாம்பவான்களின் இசையை, நிபுணத்துவத்தை மதிப்பிடுவதோ இனி தமிழ்ச் சமூகத்துக்குத் தொலைவான விஷயமில்லை. ஏன்னா....

`ராஜா கைய வைச்சா… அது ராங்கா போனதில்லே!’

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Valentine's Day: காதலைத் தூண்டும் இசை... பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் தெரியுமா?

"இசைக்கு மயங்காத உயிர்களை இல்லை" என்று சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். நம் அன்றாட வாழ்வில் இணையத்தில் பார்க்கப்படும் காணொளிகளில் 20% இசை சம்பந்தமான காணொளிகள் உள்ளதாம்.இசையால் ஒருவரை மகிழ்விக்கவும் முட... மேலும் பார்க்க

Krishnakumar Kunnath - KK (கிருஷ்ணகுமார் கண்ணதாசன்) பாடகர்

கிருஷ்ணகுமார் கண்ணதாசன் (KK)பிறப்பு: 1968, சென்னை, இந்தியாஇறப்பு: 31 மே 2022கோடைச் சொற்கள்: இந்திய இசை, பாடகர், இசையமைப்பாளர்மருத்துவம்: கிருஷ்ணகுமார் கண்ணதாசன் (KK) தமிழில் அதிகம் பரபரப்பாக பேசப்படும... மேலும் பார்க்க