அரக்கனை வீழ்த்தினார்களா அஷ்ட காளிகள்? சுழல் - 2 விமர்சனம்!
‘ஓரம் போ’, ‘வ குவாட்டர் கட்டிங்’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட தனித்துவமான களத்தில் திரைக்கதை அமைத்து வெற்றி பெற்ற இயக்குநர்களான இணையர்கள் புஷ்கர் - காயத்ரி எழுத்தில் உருவாகியிருக்கிறது ‘சுழல் - 2’ தொடர்.
சுழல் முதல் பாகத்தில் உதகையில் சிமெண்ட் தொழிற்சாலை ஊழியரான நடிகர் பார்த்திபனின் மூத்த மகள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அவரின் தங்கை கோபிகா ரமேஷ் இருவரும் சிறுவயதில் தாங்கள் சந்தித்த பாலியல் வன்கொடுமைகளால் வளர்ந்தபின் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள் என்பதை மையப்படுத்தி கதை அமைந்திருந்தது. இப்பாகத்தில் நடிகர்கள் ஸ்ரேயா ரெட்டி மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோரின் நடிப்பு பெரிய பாராட்டுகளைப் பெற்றதுடன் தமிழில் நல்ல இணையத் தொடர் என்ற பெயரையும் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, இரண்டரை ஆண்டுகள் கழித்து சுழல் - 2 தொடர் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் சிறார் பாலியல் வன்கொடுமை கதையுடன் அங்காள பரமேஸ்வரி வழிபாடு, மயானக் கொள்ளை திருவிழா போன்றவற்றை படிமம் போல் இணைத்து புஷ்கர் - காயத்ரி திரைக்கதை எழுதியதால், சாதாரண கதையாக இல்லாமல் தனித்துவமானத் தொடர் என்கிற அம்சத்தைப் பெற்றது. இரண்டாம் பாகத்திலும் அதேபோல் குலசை தசரா திருவிழாவை மையப்படுத்தி அதற்கேற்ப கதாபாத்திரங்களை உருவாக்கி தொடருக்கான கதையை எழுதியுள்ளனர்.

கதைப்படி, உதவி ஆய்வாளரான சக்கரை (கதிர்) பணியிடை நீக்கத்திலிருக்கிறார். ஊருக்குள் சும்மா இருக்க வேண்டாமென அவரை வளர்த்த வழக்குரைஞர் செல்லப்பா (நடிகர் லால்) வீட்டுக்குச் செல்கிறார். வீடு அமைந்திருக்கும் காளிப்பட்டினம் என்கிற ஊருக்குள் லாலுக்கு பெரிய மதிப்பு இருக்கிறது. மிக நேர்மையான வழக்குரைஞர் என்றும் நல்லதை மட்டுமே செய்ய விழைபவர் என்கிற அடையாளமும் இருப்பதால் அவர் மீது பலருக்கும் மரியாதை உண்டு. அதேநேரம், சக்கரை சிறையிலிருக்கும் நந்தினியை (ஐஸ்வர்யா ராஜேஷ்) வெளியே கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். இப்படியிருக்க, ஒருநாள் மர்மமான முறையில் செல்லப்பா உயிரிழக்கிறார்.
இது தற்கொலையா இல்லை கொலையா? என்கிற நோக்கில் சக்கரையே வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார். தடயங்கள் கிடைத்தாலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் குழம்பும்போது 8 வெவ்வேறு ஊர்களிலிருந்து 8 பெண்கள் நாங்கள்தான் செல்லப்பாவைக் கொலை செய்தோம் என தனித்தனியாக வாக்குமூலம் கொடுக்கின்றனர். நல்ல மனிதராக அறியப்பட்ட செல்லப்பாவை ஏன் இப்பெண்கள் கொல்ல வேண்டும்? உண்மையில் இதற்கு பின் வேறு ஏதாவது சதி இருக்கிறதா? என்பதே சுழல் - 2 தொடரின் கதை.
இதையும் படிக்க: ஓடிடியில் சம்யுக்தா விஜயனின் நீல நிறச் சூரியன்!
ஒரு இணையத் தொடருக்கு உண்டான நல்ல மதிப்பீடுகளில் ஒன்று, தொடர் நிகழும் இடங்கள் மீதான நம்பகத்தன்மை. சுழல் - 2 தொடரில் பல காட்சிகளில் பெண்கள் சிறைச்சாலை, தசரா திருவிழா, கடற்கரை கிராமங்கள், வேஷமிட்டு ஆடும் பக்தர்கள் என முழுக்க முழுக்க களத்தை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். இந்தியளவில் உருவான இணையத் தொடர்களிலேயே பெண்கள் சிறைச்சாலையின் அமைப்பு, சக கைதிகளுக்கு இடையேயான பாலியல் அத்துமீறல்கள், வன்முறைகள் என சுழல் - 2 தொடரில் சில காட்சிகள் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குலசைத் திருவிழாவில் சூரசம்ஹாரம் முடிந்ததும் வேண்டுதல்களுக்காக வேஷம் கட்டிய பக்தர்கள் இறுதியாகக் கடலில் நீராடி தங்கள் வேஷங்களை களைப்பதுடன் பாவம், பொறாமை, குற்றவுணர்ச்சி என பலவற்றையும் களைவதாகவே நம்பிக்கை இருக்கிறது. அதை ஒரு படிமமாக வைத்து சுழல் - 2 இல் 8 பெண்கள் ஏன் திடீரென கொலை வழக்கில் கைதாகின்றனர், இவர்களுக்குள் என்ன ஒற்றுமை இருக்கிறது என தொடரில் பல புதிர்களையும் கேள்விகளையும் சுவாரஸ்யமாக கொண்டு செல்கின்றனர்.
இயக்குநர்கள் பிரம்மா, சர்ஜுன் ஆகியோரே இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளனர். எந்த விதத்திலும் பார்வையாளர்களுக்கு சலிப்பு வரக்கூடாது என்பதற்காக படத்தின் காட்சியமைப்புகள் பல இடங்களில் பிரமாதமாக இருக்கின்றன. குறிப்பாக, பெண்கள் சிறைச்சாலையில் நடக்கும் சண்டைக்காட்சிகள், மஞ்சிமா மோகன் இடம்பெற்ற காட்சிகள் என இணையத் தொடரின் நேர்த்திக்காக இருவரும் சிறப்பாக காட்சிகளை உருவாக்கியுள்ளனர். வசனங்களும் பொறுப்பாக கையளப்பட்டிருந்தன.
தொடரின் கதையை எழுதிய புஷ்கர் - காயத்ரிக்கு கூடுதல் பாராட்டுகள். கிரைம் திரில்லர் கதையாக மட்டுமல்லாது நம்முடைய வழிபாட்டு முறைகளையும் மனிதன் கடவுளை அணுகும் விதங்களையும் குற்றப் பின்னணியில் அலசியது என இத்தொடருக்காக நன்றாக உழைத்திருக்கின்றனர்.
தூத்துக்குடியிலுள்ள குலசேகரபட்டினத்தில் ஆண்டுதோறும் நிகழும் தசரா திருவிழாவே இத்தொடரின் சரடாக இருக்கிறது. 10 நாள்கள் நடைபெறும் விழாவில் ஒவ்வொரு நாளும் ஒரு நிகழ்வு உண்டு. அப்படியே, இத்தொடரும் 8 எபிசோடுகளாக 8 காளிகளை (அஷ்ட காளிகள்) மையப்படுத்தி இவர்கள் அரக்கனை கொல்கிறார்களா என்கிற தருணத்தை திரைக்கதைக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். இத்தொடரை பார்த்து முடிக்கும்போது குலசை திருவிழா குறித்து வேறுவேறு திறப்புகளும் கிடைக்கின்றன.

முதல் பாகத்தைப்போலவே இதிலும் நடிகர்கள் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் நல்ல பங்களிப்பைச் செய்துள்ளனர். ஐஸ்வர்யாவுக்கு அதிக காட்சிகள் இல்லையென்றாலும், கதையின் போக்கை மாற்றக்கூடிய கதாபாத்திரமாக இருக்கிறார். அதேபோல், நடிகர்கள் லால், மஞ்சிமா மோகன், சரவணன், அர்ஷ்யா லட்சுமணன் உள்ளிட்டோரும் காத்திரமான நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர்.
இவர்களைக் காட்டிலும் இத்தொடருக்கு பலமாக அமைந்தது 8 இளம் பெண்களாக நடித்த நடிகைகள் கௌரி கிஷன், மோனிஷா பிளஸ்ஸி, சம்யுக்தா, ஹரிணி சுந்தர்ராஜன், நிகிலா சங்கர், ஸ்ரீஷா, கலைவாணி பாஸ்கர், அபிராமி போஸ் ஆகியோர்தான். ஏன் கொலை செய்தோம் என்பதில் துவங்கும் இவர்களின் பதற்றமான உடல்மொழிகள் இறுதிவரை அட்டகாசமாக கதைக்கு உதவுகிறது. முக்கியமாக, சிறையில் நடக்கும் சண்டைக்காட்சிக்கு தத்ரூபமான நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.
குலசை திருவிழாவில் ஆண்கள், பெண்கள் வேஷம் போடுவது, குழந்தை கடத்தல்களைக் காட்டுவது, சூரசம்ஹார நிகழ்வு என ஒளிப்பதிவாளர் அபிரஹாம் ஜோசஃப் தரமான பணியைச் செய்திருக்கிறார். இணையத் தொடருக்கான கச்சிதமான ஒளிப்பதிவு. அதேபோல், இத்தொடரின் இன்னொரு பலமாக இருந்தவர் இசையமைப்பாளர் சாம் சிஎஸ். பின்னணி இசையென வந்துவிட்டால் நான் தனிரகம் என்பதுபோல் அண்மை காலமாக பல படங்களுக்கு பின்னணி இசைக்காக மட்டும் இவரைப் பயன்படுத்தி வருகின்றனர். இத்தொடரில் பல காட்சிகளில் சாமின் இசை காட்சிக்கான அடர்த்தியை மேலும் அதிகப்படுத்துகிறது.
நல்ல தொடராக உருவாகியிருந்தாலும் முதல் சில எபிசோடுகளில் இன்னும் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கலாம். ஒருகட்டத்திற்கு மேல் காட்சிகளும் ஊகிக்கும்படியாக இருந்தது சின்ன ஏமாற்றம்தான். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வேறு வண்ணங்கள் உண்டு என்பதை ஆணித்தரமாக நம்பும் சக்கரை கதாபாத்திரத்தை கொஞ்சம் நெகடிவாக எழுதியிருந்தால் இத்தொடர் இன்னும் சிறப்பு வாய்ந்ததாக மாறியிருக்கலாம்.
இருப்பினும், இந்திய இணையத் தொடர்கள் கண்ட வளர்ச்சியில் சுழலுக்கும் முக்கியமான இடமுண்டு என்றுதான் சொல்ல வேண்டும். கிரைம் திரில்லராகவும் சரி, வழிபாட்டு சடங்குகளுடன் கதை சொன்ன பாணியாகவும் சரி சுழல் - 2 சிறப்பான ஆக்கமாகவே உருவாகியிருக்கிறது.