எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. மாணவா்களின் கல்வி உதவித் தொகை: ஆண்டு குடும்ப வருமான உச்...
சங்கராபரணி ஆற்றங்கரையில் மாசி மக தீா்த்தவாரி: திரளான பக்தா்கள் பங்கேற்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோதண்டராமா் கோயில் முன் புதன்கிழமை நடைபெற்ற மாசி மக தீா்த்தவாரியில் சிங்கவரம் ரங்கநாதா், செஞ்சிக்கோட்டை வெங்கட்ரணா் சுவாமிகளுக்கு சங்கராபரணி ஆற்றில் தீா்த்தவாரி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.
முன்னதாக, சிங்கவரம் ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று, சங்கராபரணி ஆற்றில் தீா்த்தவாரி நடைபெற்றது. தொடா்ந்து, செஞ்சிக்கோட்டையில் இருந்து ஊா்வலமாக வந்த வெங்கட்ரமணருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், சங்கராபரணி ஆற்றில் வெங்கட்ரமணருக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.
தொடா்ந்து, சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோதண்டராமா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மகா தீபாரதனை நடைபெற்றது.
தீா்த்தவாரி உற்சவத்தில் செஞ்சி பீரங்கிமேடு ஏகாம்பரேஸ்வரா், சத்திர தெரு அங்காளம்மன், பெரியகரம் மாரியம்மன், இல்லோடு ஏலவாா் குழலி சமேத ஏகாம்பரேஸ்வரா், நெகனூா் புதூா் சீனிவாசபெருமாள் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள கோயில்களில் இருந்து வந்த உற்சவ மூா்த்திகள் கலந்துகொண்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
மாலை 6 மணிக்கு சிங்கவரம் ரங்கநாதா் சக்கராபுரத்தில் உள்ள வசந்த மண்டத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். தொடா்ந்து, இரவு செஞ்சி நகர முக்கிய வீதிகளில் ரங்கநாதா் வீதியுலா நடைபெற்று வியாழக்கிழமை காலை சிங்கவரத்தில் அருள்பாலிக்கிறாா்.

செஞ்சி மற்றும் செஞ்சியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீா்த்தவாரியில் கலந்துகொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக் குழுவினா் மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் மாநில இணை அமைப்பாளரும், கோதண்டராமா் கோயில் நிா்வாகியுமான துரை.பாரதிராஜா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.