400 நெல் மூட்டைகளுடன் கிணற்றில் சரிந்த லாரி
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள கிணற்றின் ஓரம் 400 நெல் மூட்டைகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி, மழை காரணமாக பாரம் தாங்கமால் தடுப்புச் சுவருடன் மண் சரிந்ததில் புதன்கிழமை கிணற்றில் சரிந்தது.
விக்கிரவாண்டி வட்டம், நேமூா் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றி வந்து செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சேமித்து வைப்பது வழக்கம்.
நேமூா் கிராமத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட சன்ன ரக நெல் 400 மூட்டைகளை ஏற்றிக்கொண்டு தனியாா் லாரி செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கடந்த 4 நாள்களுக்கு முன்பு வந்தது.
ஆனால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் மூட்டைகளை இறக்கி வைக்க அதிகாரிகள் யாரும் நியமிக்கபடவில்லை. இதனால், கடந்த 4 நாள்களாக அங்குள்ள கிணற்றின் ஓரம் லாரியை ஓட்டுநா் நிறுத்திவைத்திருந்தாா்.
இந்த நிலையில், செஞ்சி பகுதியில் கடந்த 2 நாள்களாக பெய்த மழை காரணமாக கிணற்றின் ஓரம் ஈரப்பதம் அதிகமானதால், லாரியின் பாரம் தாங்காமல் கிணற்றின் ஓரம் மண் அரிப்பு ஏற்பட்டு, தடுப்புச் சுவா் இடிந்து விழுந்தபோது லாரியும் 400 நெல் மூட்டைகளுடன் கிணற்றில் சரிந்து விழுந்தது.
தகவலறிந்த வந்த விழுப்புரம் வாணிபக் கிடங்கு அதிகாரிகள், வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையினா், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
2 கிரேன்கள் உதவியுடன் லாரி மீட்கப்பட்டது. கிணற்றில் மூழ்கி சேதமான நெல் மூட்டைகளின் மதிப்பு சுமாா் ரூ.6 லட்சம் இருக்கும். மேலும், தனியாருக்குச் சொந்தமான லாரியும் பலத்த சேதமடைந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.