சென்னை: மாநகர குளிர்சாதனப் பேருந்துகளில் பயணிக்க புதிய ’பஸ் பாஸ்’!
சென்னை பள்ளிகளில் பாலின சமத்துவம் கற்பிப்பு: மேயா் ஆா்.பிரியா
சென்னை மாநகராட்சியின்கீழ் செயல்படும் பள்ளிகளில் பாலின சமத்துவம் குறித்து கற்பிக்கப்படுகிறது என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிழற்குடைகளை நீா் தெளித்து சுத்தம் செய்யும் பணிக்காக 30 வாகனங்களை மேயா் ஆா்.பிரியா புதன்கிழமை ரிப்பன் மாளிகை வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சி பொதுக் கழிப்பிடங்களில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை. மாநகராட்சி சாா்பில் பராமரிக்கப்படும் கழிப்பிடங்கள் கடந்த ஆண்டு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதிகளிலும் பொதுமக்களின் தேவை அறிந்து கழிப்பிடம் அமைப்பதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இதில், பழுதடைந்து காணப்படும் கழிப்பறைகள், பயன்படுத்தபடாமல் உள்ள கழிப்பறைகள் கண்டறிந்து புதுப்பிக்கப்படும்.
மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியா்கள் மூலம் மாணவா்களுக்கு பாலின சமத்துவம் குறித்து கற்பிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ‘குட் டச், பேட் டச்’ குறித்து கற்பிக்கப்படுகிறது. ஆண், பெண் சமமாக பழகும் வகுப்பு சிறு வயது முதல் கற்பிக்கப்படுகிறது என்றாா் அவா்.
30 வாகனங்கள்: சென்னை மாநகராட்சியில் உள்ள 925 பேருந்து நிழற்குடைகள், 173 நடைபாதைகளை சுத்தம் செய்யும் பணிக்காக மண்டலத்துக்கு இரு வாகனங்கள் என 15 மண்டலத்துக்கு 30 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. உயா் அழுத்த பம்புகள் மற்றும் தண்ணீா் தொட்டி பொருத்தப்பட்ட வாகனங்களில் சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் மறுசுழற்சி செய்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் கொண்டு சுத்தம் செய்யப்படும்.
இந்த பணியின்போது நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பாதசாரிகள் முழுமையான பாதுகாப்புடன் நடைபாதைகளை பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்படும். சென்னை மாநகரை தூய்மையாக வைப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.