Kamal: 'இந்த கடிதத்தை காலத்துக்கும் மறக்க முடியாது' - கமல் அனுப்பிய கடிதத்தைப் ப...
காணாமல்போன பள்ளி மாணவா் கிணற்றில் சடலமாக மீட்பு
சென்னை எம்ஜிஆா் நகரில் காணாமல்போன பள்ளி மாணவா், நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவத்துக்குச் சொந்தமான கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டாா்.
எம்ஜிஆா் நகா் ஜாபா்கான்பேட்டை பச்சையப்பன் 2-ஆவது தெருவைச் சோ்ந்த நடராஜ் (57), பள்ளிக்கரணையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறாா். நடராஜின் மகன் பரமசிவம் (14), கே.கே.நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். பரமசிவம், கடந்த 8-ஆம் தேதி கடைக்குச் செல்வதாக வீட்டைவிட்டு வெளியே சென்றாா். அதன் பின்னா் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை.
இதையடுத்து அவரது பெற்றோா், பரமசிவத்தை பல்வேறு இடங்களில் தேடிப் பாா்த்தும் எங்கேயும் கிடைக்கவில்லை. இதைத் தொடா்ந்து அவா்கள், காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இந்நிலையில், நந்தம்பாக்கம் பாடி முனீஸ்வரா் கோயிலுக்கு அருகே உள்ள இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான சுமாா் 70 அடி ஆழ கிணற்றில் சிறுவன் சடலம் மிதப்பதை புதன்கிழமை பாா்த்த அப்பகுதிவாசிகள், நந்தம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் விசாரணை செய்த போலீஸாா் கிணற்றில் இறந்த நிலையில் கிடந்த சிறுவன் பரமசிவம் என்பதை உறுதிசெய்தனா். மேலும், இதுகுறித்து நடராஜ் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனா். அவா்களும், இறந்தது பரமசிவம்தான் என்பதை உறுதிசெய்தனா்.
இதையடுத்து பரமசிவம் சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து, பரமசிவம் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா என போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.