ஆடையை அவிழ்த்தால் பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? பாடகி சிவாங்கி கேள்வி!
கனடாவின் பிரதமராக மார்க் கார்னி நாளை பதவியேற்பு!
கனடாவின் 24-ஆவது பிரதமராக மார்க் கார்னி (59) நாளை(மார்ச் 14) பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழா தொடர்பான அறிவிப்பை ஆளுநர் ஜெனரல் மேரி சைமன் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது. முன்னதாக கனடாவின் பிரதமராகவுள்ள ஐஸ்டின் ட்ரூடோ, முறைப்படி ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பிக்கவுள்ளார்.
கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார். அவரே லிபரல் கட்சியின் தற்போதைய தலைவராகவும் பதவி வகிக்கும் சுழலில், லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கித் தலைவரான மார்க் கார்னி வெற்றிபெற்றார்.
இதையடுத்து, கனடாவின் 24-வது பிரதமராகவும் லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும் மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், பதவியேற்பு நிகழ்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போதுள்ள அமைச்சர்களையே மார்க் கார்னி தக்கவைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதியமைச்சர் டொமினிக் லெப்லாங்க், வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி மற்றும் தொழில்துறை அமைச்சர் பிரான்சுவா பிலிப் ஷாம்பெயின் ஆகிய முக்கிய அமைச்சர்கள் தொடர்ந்து பதவியில் நீடிப்பார்கள் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க : கிரீன்லாந்து: அமெரிக்க எதிர்ப்புக் கட்சிகள் வெற்றி!
கனடாவை அமெரிக்காவின் மாகாணமாக்கும் டிரம்பின் திட்டத்துக்கு மத்தியில், மார்க் கார்னி புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்ற கார்னி, ”அமெரிக்கா தரப்பு கனடாவுக்கு உரிய மரியாதையை அளிக்கும் வரையில் அவர்களது நடவடிக்கைகளைப் பின்பற்றி, அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்” என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவின் வரி விதிப்பை கனடாவின் புதிய பிரதமர் எப்படி கையாளப் போகிறார் என்று சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.