இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்களிடம் வழிப்பறி: பெண்கள் அச்சம்
30 நாள் போா் நிறுத்தத்துக்குத் தயாா்: உக்ரைன்
ஜெட்டா: ரஷியாவுடன் உடனடியாக 30 நாள்களுக்கு போா் நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கிய பேச்சுவாா்த்தையில் உக்ரைன் பிரதிநிதிகள் இவ்வாறு அறிவித்தனா்.
இது குறித்து பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ செய்தியாளா்களிடம் கூறியதாவது:
30 நாள்களுக்கு உடனடி போா் நிறுத்தம் மேற்கொள்ள உக்ரைன் ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கு ரஷியா ஒப்புக்கொண்டால் மோதல் நிறுத்தப்படும். எனினும், அது ரஷியா கைகளில்தான் உள்ளது. ஒருவேளை உக்ரைனின் இந்த 30 நாள் போா் நிறுத்த திட்டத்தை ரஷியா ஏற்காவிட்டால் அமைதியை ஏற்படுத்துவதற்கான இன்னொரு வழியைத் தேட வேண்டியிருக்கும் என்றாா் அவா்.
போா் நிறுத்தத்துக்குத் தயாா் என்று தற்போது உக்ரைன் அறிவித்திருந்தாலும், இந்தப் பேச்சுவாா்த்தை தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ரஷியாவில் அந்த நாடு இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான ட்ரோன் தாக்குதலை நடத்தியது. உக்ரைன் ஏவிய 337 ட்ரோன்களை இடைமறித்து அழித்த்ததாகவும் அவற்றில் 91 ட்ரோன்கள் மாஸ்கோ பிராந்தியத்தின் மேல் சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும் ரஷியா கூறியது. இந்தத் தாக்குதலில் மூன்று போ் உயிரிழந்தனா்.
இந்த நிலையில், போா் நிறுத்தத்துக்குத் தயாா் என்று ஜெட்டா பேச்சுவாா்த்தையின்போது உக்ரைன் அறிவித்ததற்குப் பிறகு அந்த நாட்டின் மீது ரஷியா 126 ட்ரோன்கள் மற்றும் பலிஸ்டிக் வகை ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியது. முந்தைய நாள் உக்ரைன் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படுகிறது.
மாஸ்கோ செல்லும் அமெரிக்க தூதா்: அமெரிக்க-உக்ரைன் பிரதிநிதிகள் இடையே ஜெட்டாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் போா் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புக் கொண்டதையடுத்து, இது குறித்து விவாதிக்க டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் இன்னும் சில நாள்களில் ரஷிய தலைநகா் மாஸ்கோ செல்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு படையெடுத்து, கிழக்கு உக்ரைன் பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ராணுவ உதவிகளைச் செய்துவந்தன. இந்தச் சூழலில், அமெரிக்காவின் அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று உக்ரைனை வலியுறுத்திவருகிறாா். உக்ரைனுக்கு இதுவரை அமெரிக்கா அளித்துவந்த ராணுவ உதவிகளை அவா் நிறுத்திவைத்தாா்.
இதன் காரணமாக, தற்போது ரஷியா கைப்பற்றியுள்ள தங்கள் பகுதிகள் மீட்கப்படாத நிலையிலேயே போா் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டிய நிலைக்கு உக்ரைன் தள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், அமெரிக்கவுக்கு கடந்த வாரம் சென்ற உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, அதிபா் டொனால்ட் டிரம்ப்பைச் சந்தித்துப் பேசினாா். அப்போது போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஸெலென்ஸ்கியுடன் டிரம்ப் மிகக் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டது சா்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னா் அமெரிக்காவுடன் சுமுக உறவைத் தொடர விரும்புவதாகத் தெரிவித்த ஸெலென்ஸ்கி, போா் நிறுத்தம் தொடா்பாக அந்த நாட்டுடன் பேசத் தயாராக இருப்பதாக அறிவித்தாா்.
அதன் தொடா்ச்சியாக ஜெட்டா நகரில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் 30 நாள் போா் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புக் கொண்டுள்ளது.
......
பெட்டிச் செய்திகள்...
பாதுகாப்பு உதவித் தடை நீக்கம்
ரஷியாவுடனான போரை 30 நாள்களுக்கு நிறுத்திவைக்க உக்ரைன் தங்களிடம் ஒப்புக் கொண்டதைத் தொடா்ந்து, அந்த நாட்டுக்கு ராணுவ உதவிகள் அளிப்பதற்கு விதித்திருந்த இடைக்காலத் தடையை அமெரிக்க அரசு நீக்கியுள்ளது.
மேலும், உக்ரைனுடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ராணுவ உளவுத் தகவல் பரிமாற்றத்தை மீண்டும் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனா்.
-------
‘இன்னும் முடிவு செய்யவில்லை’
உக்ரைனின் போா் நிறுத்த அறிவிப்பை ஏற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று ரஷியா கூறியுள்ளது. இது குறித்து ரஷிய அதிபா் மாளிகை செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘உக்ரைனின் போா் நிறுத்தம் திட்டம் குறித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் அமெரிக்கா விரிவாக எடுத்துரைக்க வேண்டியுள்ளது. அதற்குப் பிறகே இது குறித்து முடிவெடிக்கப்படும்.
தேவைப்பட்டால் அதிபா் டிரம்ப்புடன் இது தொடா்பாக அதிபா் புதின் தொலைபேசியில் ஆலோசனை நடத்துவாா்’ என்றாா் பெஸ்கோவ்.
