அரிய வாய்ப்பு... சவூதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பெண் செவிலியா் பணி!
Ranya Rao: `உங்கள் வீட்டு வாசலை எட்டிவிட்டது' - புகைப்படத்தைப் பகிர்ந்து சித்தராமையாவைச் சாடும் பாஜக
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் பெங்களூருவில் கைதுசெய்யப்பட்டு தற்போது 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் இருக்கிறார். தொடையில் ஒட்டி வைத்து தங்கக் கட்டிகளை அவர் கடத்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதுவரை நடிகை ரன்யாவிடமிருந்து மொத்தம் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெங்களுரு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

இந்த வழக்கு பற்றி நீதிமன்றத்தில் பேசிய நடிகை, ``நான் எப்படி இந்த விவகாரத்திற்குள் வந்தேன் என்று எனக்கு தெரியவில்லை. நான் இந்தக் கடத்தலில் சிக்க வைக்கப்பட்டுள்ளேன். ஒரு பெண்ணாக இருந்தும் என்னை தூங்கவோ, ஓய்வெடுக்கவோ விட மறுக்கிறார்கள்" என்றார். இந்த வழக்கு விசாரணை மார்ச் 24 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்குத் தொடர்பிருப்பதாக கர்நாடக பா.ஜ.க தலைவர் அமித் மாளவியா தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக நடிகையுடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ``கர்நாடகாவில் ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கு இப்போது முதல்வர் சித்தராமையாவின் வீட்டு வாசலை எட்டியுள்ளது.

இந்தப் புகைப்படத்தில் தற்போதைய உள்துறை அமைச்சர் பரமேஸ்வராவும் இடம்பெற்றுள்ளார். ஆனால், இதில் இருக்கும் அரசியல் தொடர்புகளை நிராகரிப்பவர் காங்கிரஸின் வருங்கால முதல்வர் டி.கே.சிவக்குமார் தான்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு முன்பே கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், ``தங்கக் கடத்தலில் எந்த அமைச்சரும் இதில் ஈடுபடவில்லை, எங்களுக்கு எதுவும் தெரியாது. இது எல்லாம் அரசியல் வதந்திகள். விசாரணை அதிகாரிகள் சட்டத்தின்படி செயல்படுவார்கள்." எனக் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ ரிஸ்வான் அர்ஷத், ``விசாரணை அமைப்புகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களுக்கு விசாரிக்க அனைத்து சுதந்திரமும் உள்ளது. இதில் எங்கள் தரப்பில் யாராவது சம்பந்தப்பட்டிருந்தால், அதுவும் வெளியே வரட்டும். ஆனால் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கிறோம்: மாநில அரசைச் சேர்ந்த யாரும் எந்த வகையான சிறிய குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை." என்றார்.