'புதின் ஒப்புக்கொள்வார் என்று நினைக்கிறேன்; இல்லையென்றால்...' - போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப்
கடந்த மாதம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் சவுதி அரேபியாவில் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் உக்ரைன் அதிபர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் இரு நாட்டு அதிபர்களின் பேச்சுவார்த்தையில் நின்றுபோன கனிம வளம் ஒப்பந்தம் கையெழுத்தாவது முடிவானது.
அடுத்ததாக, முக்கியமாக, இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா கூறிய '30 நாள்கள் போர் நிறுத்தத்திற்கு' உக்ரைன் ஒப்புக்கொண்டது.
இதனையடுத்து, அமெரிக்க அதிகாரிகள் ரஷ்யாவிற்கு பேச்சுவார்த்தை நடத்த செல்ல உள்ளனர். இது குறித்து ட்ரம்ப் கூறும்போது, "ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவில் இருந்து அதிகாரிகள் செல்கின்றனர். ரஷ்யா போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளும் என்றுதான் நம்புகிறேன். அப்படி நடந்தால் போரில் சிந்தப்படும் ரத்தங்களை 80 சதவிகிதம் தடுக்கலாம்.
புதினுடன் அடுத்து எப்போது பேசுவேன் என்று தெரியவில்லை. ஆனால், அவர் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்வார் என்று நம்புகிறேன். ஒருவேளை, அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அமெரிக்கா ரஷ்யா மீது கடுமையான வரிகளை விதிக்கும். நான் அமைதியை விரும்புகிறேன். அதனால், நான் இதை செய்யக் கூடாது என்று நினைக்கிறேன்" என்று பேசியுள்ளார்.
ஆனால், அமெரிக்கா உடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகும், உக்ரைன் தங்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தியது என்று ரஷ்யா வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டு குற்றம்சாட்டியிருந்தது. இந்த நிலையில், அமெரிக்கா நடத்தும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய அதிபர் புதின் ஒப்புக்கொள்வாரா?!