மகாராஷ்டிரத்தில் இந்துக்கள் நடத்தும் இறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' சான்றிதழ்! வலுக்கும் எதிர்ப்புகள்!!
மகாராஷ்டிரத்தில் இந்துக்கள் நடத்தும் ஆட்டிறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' சான்றிதழ் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் முழுக்க இந்துக்கள் நடத்தும் ஆட்சிறைச்சிக் கடைகளை அடையாளம் காணும் வகையில் அந்த கடைகளுக்கு 'மல்ஹர்' சான்றிதழ் வழங்கப்படும் என்று மாநில மீன் வளத்துறை அமைச்சர் நிதேஷ் ரானே அறிவித்து அதனைத் தொடங்கியும் வைத்துள்ளார். மேலும் இந்துக்கள் 'மல்ஹர்' சான்றிதழ் இல்லாத கடைகளில் இறைச்சி வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன் மூலமாக இந்து சமூகத்தைச் சேர்ந்த மக்கள், இந்தக் கடைகளை எளிதாக அடையாளம் காண முடியும். இந்துக்களுக்கு விநியோகிக்கப்படுவதால் ஆட்டிறைச்சி சுத்தமாக இருக்கும், இந்துக்களின் பொருளாதாரமும் மேம்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க | புற்றுநோய்க்கு மருந்தாகிறதா காளான்? - புதிய கண்டுபிடிப்பு!
இதனிடையே இது சமூகத்தை பிளவுபடுத்தும் செயல் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்து - முஸ்லீம் சமூகத்தினரிடையே பிரச்னையை ஏற்படுத்தும் என காங்கிரஸ் எம்எல்ஏ நானா படேல் தெரிவித்துள்ளார்.
பாஜக எம்எல்ஏ சஞ்சய் உபாத்யாயா கூறுகையில், 'முஸ்லீம்கள் விற்கும் 'ஹலால்' இறைச்சியில் ரசாயனங்கள் கலக்கப்படுகிறது. இது உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது. அதனைத் தடுக்கவே, இந்துக்களுக்கு என்று பிரத்யேக கடைகளுக்கு சான்றிதழ் வழங்குகிறார்கள். அமைச்சரின் முடிவை வரவேற்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
'மல்ஹர்' சான்றிதழ் பெறுவது எப்படி?
இறைச்சிக் கடைகள்(சிக்கன், மட்டன்) நடத்தும் இந்துக்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
'ஜத்கா' முறைப்படி இறைச்சிகள் சுத்தமான, கெட்டுப்போகாததாக இருக்க வேண்டும். வேறு இறைச்சிகளின் கலப்படம் இருக்கக் கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.