Tushar Gandhi: காந்தியின் பேரனை மறித்து கோஷம்; ஆர்எஸ்எஸ்-பாஜக நிர்வாகிகள் மீது வ...
ஆற்றுகால் பகவதி கோயில் பொங்காலை விழா; லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு!
பாண்டிய நாட்டு ராணியின் சிலம்பை திருடியதாக பொய்யாக திருட்டுப் பட்டம் சூட்டி கோவலன் கொலைசெய்யப்பட்டார். அநீதி இழைத்து தன் கணவனை கொலைசெய்த பாண்டிய மன்னனிடம் நீதிகேட்டு சிலம்பெடுத்துச் சென்றார் கண்ணகி தேவி. பாண்டிய மன்னனை வதம் செய்துவிட்டு சினம் தணியாமல் மதுரையில் இருந்து தெற்கு நோக்கிச் சென்று திருவனந்தபுரம் கிள்ளிப்பாலம் பகுதியில் ஆற்றின் கரையில் இளைப்பாறினார் கண்ணகி தேவி. அப்போது அந்த ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த முதியவர் கண்ணகி தெய்வத்தை ஆற்றுப்படுத்தி குடியமர்த்திய திருத்தலம் ஆற்றுகால். ஆற்றுகாலில் பகவதி அம்மனாக மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார் கண்ணகி தேவி. கண்ணகி தேவியை சாந்தப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் பெண்கள் பொங்கலிட்டு வழிபடுகின்றனர். பொங்கலிடும் பெண்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதால் ஆற்றுகால் கோயிலில் ஆண்டுதோறும் பொங்கலிடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு ஆற்றுகால் பொங்கல் விழா கடந்த 5-ம் தேதி அம்மனுக்கு காப்புகட்டி குடியிருத்தும் நிகழ்வுடன் தொடங்கியது. 9-ம் திருவிழாவான இன்று காலை 4.30 மணிக்கு பள்ளி உணர்த்தல், நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், தீபாராதனை, உஷபூஜை, தீபாராதனை, பந்தீரடிபூஜை போன்றவை நடந்தன. காலை 10:30 மணிக்கு அடுப்பு வெட்டு மற்றும் பொங்கல் வழிபாடு நடந்தது. பண்டார அடுப்பில் முதலில் தீ மூட்டப்பட்டதும், திருவனந்தபுரம் நகரம் முழுவதும் குழுமியிருக்கும் பெண்கள் பொங்கல் இட்டனர். மதியம் 1.15 மணிக்கு உச்சபூஜையை தொடர்ந்து பொங்கல் நெய்வேத்யம் நடைபெற்றது.

ஆற்றுகால் கோயிலில் 1997-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 17 லட்சம் பெண்கள் பொங்கலிட்டது கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 2004-ம் ஆண்டு 25 லட்சம் பெண்கள் பொங்கலிட்டது பழைய கின்னஸ் சாதனையை முறியடித்து புதிய சாதனையாக உருவெடுத்தது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கலிடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் இந்த ஆண்டு 40 லட்சம் பெண்கள் கலந்துகொள்வரகள் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படிருந்தது. திருவனந்தபுரம் நகரம் முழுவதும் காரணமாக புகைமூட்டமாக காணப்பட்டது. பொங்கல் விழா பூஜைகளை தந்திரி பிரம்மஸ்ரீ பரமேஸ்வரன் வாசுதேவன் பட்டதிரிபாடு, மேல்சாந்தி பிரம்மஸ்ரீ முரளீதரன் நம்பூதிரி ஆகியோர் முன்னின்று நடத்தினர்.