தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் முறைகேடு; கூடுதல் ஆணையர் நடத்திய ஆய்வால் பரபரப்பு; பின்னணி என்ன?
தென்காசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் உடனுறை உலகம்மன் ஆலயம் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோயிலில் வருகிற ஏப்ரல் 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காகத் திருக்கோயிலின் ராஜகோபுரம், கொடிமரம் ஆகியவற்றைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மகா கும்பாபிஷேக பணிகளையொட்டி கோயில் ராஜகோபுரத்திற்கு வண்ணம் தீட்டுதல், கொடிமரம் புதுப்பித்தல், பூஜை பொருள்கள், மாலை உள்ளிட்ட திருக்கோவில் தொடர்பான வரவு செலவுகளில் முறைகேடுகள் நடப்பதாகத் தொடர் புகார்கள் எழுந்தன. இந்த புகாரையடுத்து தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் பழனி நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்.

திருக்கோவில் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகள், ஆவணங்கள், கோவில் வரவு செலவு திட்ட அறிக்கைகள், குடமுழுக்கு செலவு விவரங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த அவர், முறைகேடு தொடர்பான சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி இருப்பதாகத் தகவல் வெளியானது.
இதுதொடர்பாக கோயில் பணியாளர்களிடம் துறைரீதியான விசாரணை நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது. தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திடீர் ஆய்வு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவில் ராஜகோபுரம் அருகே கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play