சிறைகளில் 544 மரண தண்டனை கைதிகள்: மத்திய முதல் இரண்டு இடங்களில் உ.பி., குஜராத்
வடலூர்: தைப்பூச ஜோதி தரிசனத்திற்கு சொந்த வாகனத்தில் செல்கிறீர்களா? – இதைப் படிங்க முதல்ல!
ஜோதி தரிசன நேரங்கள் என்னென்ன ?
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் நாளை 154-வது தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற இருக்கும் நிலையில், இன்று காலையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து வள்ளலார் பிறந்த ஊரான மருதூரில் இருக்கும் வள்ளலார் சந்நிதியில் அந்த கிராம மக்களால் வள்ளலார் தண்ணீரால் விளக்கெரியச் செய்த கருங்குழியிலும், அவர் சித்திபெற்ற மேட்டுக்குடியிலும் சன்மார்க்கக் கொடிகள் ஏற்றப்பட்டன. அதையடுத்து சத்திய ஞானசபைக்கு இடம் வழங்கிய பார்வதிபுரம் கிராம மக்கள் சீர்வரிசை மற்றும் வள்ளலாரின் திருவுருவப் படம் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொடிமரம் அருகில் வந்தனர். அதையடுத்து `அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி… தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி’ என்று முழக்கமிட்டனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2021-01/5e7b0a43-3449-4ad0-a080-e639f4bd01b5/410681.jpg)
அதன் தொடர்ச்சியாக இன்று காலை 10 மணிக்கு சன்மார்க்க கொடியேற்றம் நடைபெற்றன. நாளை நடைபெற இருக்கும் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவைக் காண இந்தியா மட்டுமல்ல, அயல் நாடுகளில் இருந்தும் வள்ளலாரின் பின்தொடர்பாளர்கள் வடலூரில் குவிந்து வருகின்றனர். நாளை 11-ம் தேதி காலை 6 மணிக்கு முதல் தரிசனமும், 10 மணிக்கு இரண்டாவது தரிசனமும், நண்பகல் 1 மணிக்கு மூன்றாவது தரிசனமும், இரவு 7 மணிக்கு நான்காவது தரிசனமும், இரவு 10 மணிக்கு ஐந்தாவது தரிசனமும், 12-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஆறாவது தரிசனமும், 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற இருக்கிறது. அதேபோல 13-ம் தேதி வியாழக்கிழமை மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பம் சித்திவளாக திருஅறை தரிசனமும் நடைபெறும். ஜோதி தரிசனம் பெருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்காக குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்திருக்கிறது.
போக்குவரத்து மாற்ற அறிக்கை
தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெளியிட்டிருக்கும் போக்குவரத்து மாற்ற அறிக்கையில், `ஜோதி தரிசனம் காண்பதற்காக தமிழகம் மட்டுமல்லாமல், பிற நாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதன் காரணமாக நாளை 11-ம் தேதி அன்று அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை, வடலூரில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2020-02/a9464193-df93-4a57-a960-7f59cce72a99/IMG_20200208_162837.jpg)
அன்று சென்னை, கடலூர், திருச்சி, சேலம், கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் இதர பகுதிகளுக்கு செல்லும் கார், வேன் உள்ளிட்ட பேருந்துகள், 11-ம் தேதி அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வடலூருக்குள் வராமல் வேறு வழிகளில் செல்ல தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடலூரில் இருந்து விருத்தாசலம் செல்லும் அனைத்து பேருந்துகளும் ஆண்டிக்குப்பம் புதிய பைபாஸ் சாலை அருகில் இடது புறமாக திரும்பி ராசாக்குப்பம், கருங்குழி கைகாட்டி, மேட்டுக்குப்பம் வழியாக விருத்தாசலம் செல்ல வேண்டும்.
அதேபோல விருதாச்சலத்தில் இருந்து கடலூர் செல்லும் வாகனங்கள் மந்தாரக்குப்பம், நெய்வேலி டவுன்ஷிப், நெய்வேலி ஆர்ச் கேட், கொள்ளுக்காரன் குட்டை, சத்திரம், குள்ளஞ்சாவடி வழியாக கடலூருக்கு செல்ல வேண்டும். பண்ருட்டியில் இருந்து கும்பகோணம் செல்லும் பேருந்துகள் கொள்ளுக்காரன் குட்டை, சத்திரம், மீனாட்சி பேட்டை, குறிஞ்சிப்பாடி, ராசாக்குப்பம் வழியாக வந்து சேத்தியாத்தோப்பு செல்லும் சாலை வழியாக செல்ல வேண்டும்.
அதேபோல் கும்பகோணத்திலிருந்து பண்ருட்டி செல்லும் வாகனங்கள் சேத்தியாத்தோப்பு, கருங்குழி, கைக்காட்டி, ராசாக்குப்பம், குறிஞ்சிப்பாடி, மீனாட்சிபேட்டை, சத்திரம், கொள்ளுக்காரன் குட்டை வழியாக செல்லுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வடலூர் - பண்ருட்டி செல்லும் வாகனங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கண்ணுத்தோப்பு பழைய பாலம் அருகில் இடது பக்கத்தில் தற்காலிக தரைப்பாலம் போடப்பட்டு பொது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. மேலும் வடலூர் காவல்துறை சார்பில் தற்காலிக கார், வேன் மற்றும் பேருந்து நிறுத்தமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-05/88d2f8d1-8d53-4162-8177-315453673acf/147547_thumb.jpg)
கடலூரில் இருந்து வடலூர் வள்ளலார் தைப்பூசம் காண வரும் சன்மார்க்க அன்பர்கள் ஆண்டிக்குப்பம் புதிய பைபாஸ் அருகில் வலது பக்கமும், பண்ருட்டியில் இருந்து வரும் வாகனங்கள் அகர்வால் பேக்கரி வழியாக ராகவேந்திரா சிட்டியிலும், சேத்தியாத்தோப்பில் இருந்து வரும் வாகனங்கள் அதே சாலையில் உள்ள வெங்கடேஸ்வரா பேக்கரி எதிரில் உள்ள இடத்திலும், விருத்தாசலம் இருந்து வரும் வாகனங்கள் மேட்டுக்குப்பம் ஆர்ச் வழியாக வீணங்கேணி பகுதியில் உள்ள இடத்திலும் பாதுகாப்பாக நிறுத்த வேண்டும். மேற்கண்ட அனைத்து தற்காலிக வாகனம் நிறுத்துமிடங்களில் இருந்தும், ஜோதி தரிசனம் காண செல்லும் சன்மார்க்க அன்பர்களுக்கு தற்காலிக பேருந்துகள், மினி பேருந்துகள் இயக்கப்படும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.