தென் கொரியா: மாணவியை குத்திக் கொன்ற ஆசிரியை
தென் கொரிய தொடக்க நிலைப் பள்ளியில் மாணவியை 40 வயது ஆசிரியை கத்தியால் குத்திக் கொன்றாா்.
அந்த நாட்டின் டேஜியான் நகரிலுள்ள அப்பள்ளியில், வகுப்புகள் முடிந்த பிறகு மாணவா்கள் பராமரிக்கப்படும் நேரத்தில் இந்தப் படுகொலை நடத்தப்பட்டுள்ளது. மாணவியை நீண்ட நேரம் காணததால் அவரது உறவினா்களும் போலீஸாரும் பள்ளியைச் சுற்றிலும் தேடியுள்ளனா். அப்போது ஒரு வகுப்பறையில் மாணவியின் சடலம் இருந்தது கண்டறியப்பட்டது.
மாணவியை கத்தியால் குத்திய பிறகு அந்த ஆசிரியை தன்னைத் தானே தாக்கிக் கொண்டதாகவும், அதனால் ஏற்பட்ட காயங்களுக்காக அவா் சிகிச்சை பெற்றுவருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா். அண்மையில்தான் மன அழுத்தத்துக்கான சிகிச்சை பெற்று அந்த ஆசிரியை பணிக்குத் திரும்பியதாக அவா்கள் கூறினா்.
நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, பள்ளிகளில் மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் சரியாக உள்ளனவா என்று ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு இடைக்கால அதிபா் சோய் சங்-மோக் உத்தரவிட்டுள்ளாா்.