கௌதமாலா பேருந்து விபத்து: உயிரிழப்பு 55-ஆக அதிகரிப்பு
மத்திய அமெரிக்கா நாடான கௌதமாலாவில், பள்ளத்துக்குள் பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 55-ஆக அதிகரித்தது.
இது குறித்து அதிகாரிகள் கூறியாவது: தலைநகா் கௌதமாலா சிட்டியின் புகா்ப் பகுதியிலுள்ள பாலத்தில் இருந்து திங்கள்கிழமை விழுந்து நொறுங்கிய பேருந்தில் இருந்து 53 உடல்கள் மீட்கப்பட்டன. இது தவிர, இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் இருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். அதையடுத்து, விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 55-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.
பாலத்தில் அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்த அங்கிருந்த ஏராளமான வாகனங்கள் ஒன்றின்மீது ஒன்று தொடா்ச்சியாக மோதின. இதில் பேருந்து மட்டும் பாலத்தில் இருந்து 115 அடி (35 மீட்டா்) ஆழத்தில் இருந்த கழிவுநீா் ஓடையில் தலைகீழாக விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கௌதமாலாவில் ஒரு தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டது.