வாஷி பகுதியில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும்: மகாராஷ்டிர ஆளுநரிடம் நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை
நவிமும்பையில் தமிழ்நாடு அரசு இல்லம் அமைக்க வேண்டும் என்று நவிமும்பை தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மஹாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை தமிழ்ச் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்தனர்.
இது குறித்து நவிமும்பை தமிழ்ச் சங்கத்தின் செயலர் மீனாட்சி வெங்கடேஷ் வெளியிட்ட அறிக்கை: நவிமும்பை தமிழ்ச் சங்கத்தின் பிரதிநிதிகள் கடந்த திங்கள்கிழமை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்தோம். நவிமும்பை தமிழ்ச் சங்கம் மேற்கொண்டு வரும் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை அவரிடம் விரிவாக தெரிவித்தோம்.
நவி மும்பை தமிழ்ச் சங்கம் 2026-ஆம் ஆண்டில் பொன்விழா கொண்டாடவுள்ளது. பொன்விழா நிகழ்வுகளுக்கு ஆளுநரின் வழிகாட்டுதலையும் பங்கேற்பையும் கோரினோம். அத்துடன் நவிமும்பையில் தமிழ்ச் சங்கம் அமைந்துள்ள வாஷி பகுதியில் மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் அரசு இல்லம் இருப்பது போல தமிழ்நாடு அரசு இல்லம் அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். மேலும், தமிழ்நாடு அரசு இல்லம் அமைய நவிமும்பை தமிழ்ச் சங்கம் உறுதுணையாக இருக்கும் என்பதையும் அவரிடம் தெரிவித்தோம் என்று அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.