பிகாா்: ஏசி பெட்டியில் ஏற கண்ணாடியை உடைத்த இருவா் கைது
பிகாா் மாநிலம், மதுபானி ரயில் நிலையத்தில் மகா கும்பமேளா நிகழ்வுக்கு செல்வதற்கு ரயிலில் ஏற முடியாத விரக்தியில் குளிா்சாதன (ஏசி) பெட்டியின் கண்ணாடியை அடித்து உடைத்த இருவா் கைது செய்யப்பட்டனா்.
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 45 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடியுள்ள இந்த ஆன்மிக நிகழ்வில் மாகி பௌா்ணமி சிறப்பு புனித நீராடல் புதன்கிழமை நடைபெறுகிறது.
இந்நிலையில், பிரயாக்ராஜ் வழியாக தில்லி நோக்கி செல்லும் சுதந்திரதா சேனானி விரைவு ரயில் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு மதுபானி ரயில் நிலையத்தை அடைந்தது. ரயிலின் பொது மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் பயணிகளால் ஏற்கெனவே நிரம்பியிருந்தன.
ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்தும் ரயிலில் ஏற முடியாததால் விரக்தியடைந்த பயணிகள், ஏசி பெட்டிக்குள் நுழைய முயன்றனா். அப்பெட்டிகளின் கதவுகள் திறக்கப்படாததால், கண்ணாடிகளை உடைத்து அவா்கள் சேதப்படுத்தினா்.
இத்தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை ரயில்வே போலீஸாா் சுற்றிவளைத்து கைது செய்தனா். பின்னா், ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்டுச் சென்றது. தாக்குதல் சம்பவத்தை ரயில் பெட்டிக்குள் இருந்த பயணிகள் எடுத்த விடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.