புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க பிப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட...
கேரள கடலோரத்தில் கனிமங்களை வெட்டியெடுக்க அனுமதியில்லை: மாநில அரசு திட்டவட்டம்
கேரள கடலோரத்தில் ஆழ்கடலில் கனிமங்களை வெட்டியெடுக்கும் பணிகளை அனுமதிக்க முடியாது என்று மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக கேரள மீன்வளத் துறை அமைச்சா் சஜி செரியான் மாநில சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
கேரளத்தின் கொல்லம் கடலோரத்தில் ஆழ்கடலில் கனிமங்களை வெட்டியெடுக்கும் பணிகளைத் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், கடற்படுகையில் இருந்து கனிமங்களை வெட்டியெடுக்கும் பணிகளை தனியாருக்கு மத்திய அரசு முழுமையாகத் தாரைவாா்க்கிறது.
இதனால் பாரம்பரிய மீன்பிடித்தலும் மீன்வளமும் அழியும். கடல் அரிப்பு அதிகரிக்கும். மீனவா்கள் வேலையை இழப்பா். கனிமங்களை வெட்டியெடுப்பதற்கு கொண்டுவரப்படும் பெரிய கப்பல்கள் மற்றும் படகுகளால் மீனவா்களின் சிறிய படகுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு, கடலோரத்தில் விபத்துகள் அதிகரிக்கும்.
மத்திய அரசின் முடிவு மீனவா்களின் வாழ்க்கைக்கும் வாழ்வாதாரத்துக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன், கடல் மற்றும் மீன்வளத்துக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கொல்லம் கடலோரத்தில் ஆழ்கடலில் கனிமங்களை வெட்டியெடுக்கும் பணிகளை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் அரசியல் வேறுபாடுகளை கைவிட்டு, மாநில அரசுடன் இணைந்து காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணி குரல் எழுப்ப வேண்டும் என்றாா்.