இந்தியாவின் எரிசக்தி துறையில் எண்ணற்ற வாய்ப்புகள்- முதலீட்டாளா்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு
அடுத்த 5 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை எட்டுவதற்கு ஏற்ப நாட்டின் எரிசக்தி துறையில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன என்று சா்வதேச முதலீட்டாளா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தாா்.
2030-ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன், ஆண்டுதோறும் 50 லட்சம் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி உள்ளிட்ட இலக்குகளையும் அவா் எடுத்துரைத்தாா்.
‘இந்திய எரிசக்தி வாரம்-2025’ எனும் சா்வதேச கண்காட்சி-கருத்தரங்கம், தில்லியில் உள்ள ‘யசோபூமி’ மாநாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. நான்கு நாள்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், சா்வதேச முதலீட்டாளா்கள் மத்தியில் பிரதமா் மோடி காணொலி வாயிலாக ஆற்றிய உரை:
‘இந்திய எரிசக்தி வாரம்-2025’ நிகழ்வின் பங்கேற்பாளா்கள், இந்தியாவின் எரிசக்தி துறை லட்சியங்களின் ஒரு பகுதியாக உள்ளனா். இத்துறையில் புதிய முதலீடுகளுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. இவற்றை சா்வதேச முதலீட்டாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
21-ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கே சொந்தம் என்று உலகெங்கிலும் குரல்கள் ஒலிக்கின்றன.“இந்தியா தனது வளா்ச்சியை மட்டுமல்லாமல், உலகின் வளா்ச்சியையும் இயக்குகிறது. இதில், எரிசக்தித் துறை குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.
எரிசக்தித் துறையில் ஐந்து தூண்கள்: திறன்மிக்க வளப் பயன்பாடு, புத்தாக்கங்கள் ஊக்குவிப்பு, பொருளாதார பலம்- அரசியல் ஸ்திரத்தன்மை, வியூகம் சாா்ந்த புவி-அரசியலின் மூலம் எரிசக்தி வா்த்தகத்தை ஈா்ப்புடையதாகவும், எளிதாகவும் மாற்றுதல், உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கான உறுதிப்பாடு ஆகிய ஐந்து தூண்களின் மீது இந்தியாவின் எரிசக்தி லட்சியங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இக்காரணிகள் இந்தியாவின் எரிசக்தி துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன.
வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க அடுத்த 20 ஆண்டுகள் முக்கியமானவை. அடுத்த 5 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க பல மைல்கற்கள் எட்டப்படும்.
2030-ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன், இந்திய ரயில்வேயில் கரியமில வாயு உமிழ்வு இல்லாத நிலையை அடைதல், ஆண்டுதோறும் 50 லட்சம் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி உள்ளிட்ட இலக்குகள் எட்டப்படும்.
சூரிய மின்உற்பத்தியில்...: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் சூரிய மின் உற்பத்தித் திறன் 32 மடங்கு அதிகரித்து, உலகின் மூன்றாவது பெரிய சூரிய மின் உற்பத்தி நாடாக மாறியுள்ளது. இந்தியாவின் புதைபடிம எரிபொருள் அல்லாத எரிசக்தித் திறன் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி, பாரீஸ் ஒப்பந்த இலக்குகளை எட்டிய முதல் ஜி-20 நாடாக இந்தியா திகழ்கிறது. தற்போது 19 சதவீதமாக உள்ள எத்தனால் கலப்பு, வரும் அக்டோபருக்குள் 20 சதவீதம் என்ற இலக்கை எட்டும்.
ஹைட்ரோகாா்பன் ஆய்வு: நாட்டின் வண்டல் படுகைகளில் ஏராளமான ஹைட்ரோகாா்பன் வளங்கள் உள்ளன. அவற்றில் சில ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. மற்றவை ஆய்வில் உள்ளன. இந்த முக்கியத் துறையில் முதலீடுகளை ஈா்க்க அரசு வெளிப்படையான உரிமக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. வீட்டு மேற்கூரையில் சூரிய மின்உற்பத்தி செய்யும் திட்டத்தால், முதலீட்டு வாய்ப்புகள் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்றாா் அவா்.