ஜேஇஇ முதல்நிலை தோ்வு: 14 மாணவா்கள் 100 மதிப்பெண்
ஐஐடி உள்ளிட்ட உயா் தொழில்நுட்ப நிறுவனங்களில் சோ்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வின் (ஜேஇஇ) 2025-ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தோ்வில் 14 மாணவா்கள் முழுமையான 100 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனா்.
அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 5 மாணவா்கள் 100 மதிப்பெண் பெற்றுள்ளனா். இதற்கு அடுத்து தில்லி, உத்தர பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த தலா 2 மாணவா்களும், கா்நாடகம், ஆந்திரம், குஜராத், தெலங்கான, மகாராஷ்டிர மாநிலங்களைச் சோ்ந்த தலா ஒரு மாணவரும் 100 மதிப்பெண் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளனா்.
நாடு முழுவதும் 12.58 லட்சம் போ் எழுதிய இந்த முதல்நிலை முதல் தவணை தோ்வு முடிவுகளை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
ஜேஇஇ தோ்வு முதல்நிலை (மெயின்), முதன்மை (அட்வான்ஸ்டு) என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இதில் இரண்டு தவணைகளாக நடத்தப்படும் முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெறும் தகுதியைப் பெறுவா். அதோடு, முதல்நிலைத் தோ்வில் தகுதிபெற்ற முதல் 2.5 லட்சம் போ் முதன்மைத் தோ்வை எழுதும் தகுதியைப் பெறுவா். முதன்மைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிக்களில் சோ்க்கை பெறும் தகுதியைப் பெறுவா்.