சபரிமலை: `ஃபிளை ஓவரில் காத்திருக்க வேண்டாம்!' - பதினெட்டாம் படி ஏறியதும் ஐயப்ப சுவாமியை தரிசிக்கலாம்
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப பல்வேறு மாற்றங்களையும், புதிய வழிமுறைகளையும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் கேரள அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த கால மகரவிளக்கு பூஜை சமயத்தில் 18 மணி நேரம் சபரிமலை நடை திறந்திருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடிந்தது. இந்த நிலையில் பதினெட்டாம் படி ஏறியதும் ஐயப்ப சுவாமியை தரிசிக்கும் நடைமுறையை அடுத்த மாதம் முதல் அமல்படுத்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. தற்போது பதினெட்டாம் படி ஏறிய பின்னரும் இடதுபுறம் வழியாக ஃபிளை ஓவரில் ஏறி சன்னிதானத்தை சுற்றி வர குறைந்தது 30 நிமிடங்களுக்கு மேல் ஆகும். சில சமயம் அதிக நேரம் காத்திருந்து மீண்டும் கீழே வந்து ஐயப்ப சுவாமியை தரிசிக்கும் நடைமுறை உள்ளது. 1989-ம் ஆண்டு இந்த ஃபிளை ஓவர் ஏற்படுத்தப்பட்டதில் இருந்து மேம்பாலத்தில் ஏறி சுற்றிவந்து காத்திருந்து ஐயப்ப சுவாமியை தரிசிக்கும் நிலைதான் உள்ளது. இந்த நிலையை மாற்றி பதினெட்டாம் படி ஏறிய 30 விநாடிகளில் நேரடியாக ஐயப்ப சுவாமியை தரிசிக்கும் வகையில் பாதை மாற்றி அமைக்கப்பட உள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-17/85be8xek/1000041361.jpg)
பங்குனி மாத பூஜைகளுக்காக மார்ச் 14-ம் தேதி சபரிமலை நடை திறக்கும்போது இந்த புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வர உள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்து உள்ளது. அதன்படி பதினெட்டாம் படி ஏறிச்செல்லும் பக்தர்கள் கொடிமரத்தின் வலது மற்றும் இடதுபுறம் வழியாக ஐயப்ப சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். இடதுபுறம் வழியாக செல்லும் பக்தர்கள் சற்று உயரமான பகுதியில் நின்று சுவாமி தரிசனம் செய்யும் வகையிலும், வலதுபுறம் வழியாக செல்லும் பக்தர்கள் தரை மட்டத்திலேயே நின்று தரிசனம் செய்யும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. வலது மற்றும் இடதுபுற தரிசன பாதையை பிரிக்கும் வகையில் நடுப்பகுதியில் நீளவாக்கில் உண்டியல் வைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-17/d5zv4lqm/1000041364.jpg)
புதிய தரிசன நடைமுறைக்கு கேரளா ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதன் முலம் கொடிமரத்தில் இருந்து கருவறை முன்பகுதி வரை சுமார் 15 மீட்டர் தூரம் வரிசையில் செல்லும்போதே ஐயப்ப சுவாமியை தரிசிக்க முடியும். இதுவரை உள்ள நடைமுறைப்படி சுவாமி திருநடை முன்பு 3 வரிசைகளாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் சுவாமி திருநடை முன்பு சென்ற உடனே போலீஸார் நகரச்சொல்லும் நிலை உள்ளது. பக்தர்களை நகர்த்தும் விதமாக போலீஸார் தள்ளுவதாகவும் புகார்கள் எழுந்தன. புதிய வழியில் சற்று அதிக நேரம் சுவாமியை தரிசிக்க பக்தர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.