மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள்! -பிரதமர் மோடி
தில்லியில் பாஜக அரசுக்குக் காத்திருக்கும் புதிய சவால்கள்!
27 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்க்கமான ஆணையுடன் தில்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜகவிற்கு புதிய சவால்கள் காத்திருக்கின்றன.
தில்லியின் ஒன்பதாவது முதல்வராக பாஜகவின் முதல்முறை சட்டப்பேரவை உறுப்பினர் ரேகா குப்தா பதவியேற்றுள்ளார். சுஷ்மா ஸ்ராஜ், ஷீலா தீட்சித், அதிஷி ஆகியோருக்குப் பிறகு நான்காவது பெண் முதல்வர் என்கிற பெருமையையும் ரோகா குப்தா பெறுகிறார். மேலும் தில்லியில் முதல்வர் பதவி வகித்த பாஜக தலைவர்களான மதன் லால் குரானா, சாஹிப் சிங் வர்மா, சுஷ்மா ஸ்ராஜ் ஆகியோருக்குப் பிறகு நான்காவது பாஜக முதல்வராகும் பெருமையையும் இவர் பெறுகிறார்.
தில்லியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசுக்கு பல்வேறு புதிய சவால்கள் காத்திருக்கின்றன.
தேசிய தலைநகரின் நிதி நிலையைக் கண்காணிக்கும் அதே வேளையில், முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, முந்தைய அரசின் நலத்திட்டங்களைத் தொடர்வது, நகரத்தின் மாசுபாடு மற்றும் உள்கட்டமைப்பு பிரச்னைகளை சரிசெய்வது மற்றும் யமுனையைச் சுத்தம் செய்வதை உறுதி செய்வது போன்றவற்றை பாஜக அரசு நிறைவேற்ற வேண்டியக் கட்டாயத்தில் உள்ளது.
தற்போது எதிர்க்கட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி உருவானதிலிருந்து தில்லியில் ஒருபோதும் தனது அதிகாரத்தை இழந்ததில்லை. சமீபத்தில் முடிவடைந்த 70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 48 இடங்களுடன் தீர்க்கமான வெற்றியைக் கைப்பற்றியது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி 22 இடங்களை வென்றது, தலைநகரில் ஆம் ஆத்மியின் பத்தாண்டுக் கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது பாஜக.
பாஜகவால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரியாணாவைச் சேர்ந்த ரேகா குப்தாவின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றுதான்.. தில்லி பெண்களுக்கு மாதாந்திரமாக ரூ. 2,500 கௌரவ ஊதியம் வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாகும். இது கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஒரு முக்கிய வாக்குறுதியாகும். அதேசமயம் ஆம் ஆத்மி கட்சியின் ரூ. 2,100 என்ற வாக்குறுதியை விட, பெண்களுக்கு மாதாந்திரமாக வழங்கப்படும் கௌரவ ஊதியத்தை பாஜக அதிகரித்தது.