சீனாவுடன் மீண்டும் வர்த்தகம்? டிரம்ப்பின் பேச்சால் இந்தியா ஏமாற்றம்!
சீனாவில் மீண்டும் வர்த்தகம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்து வர்த்தக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சீன பொருள்கள் மீதான 10 சதவிகிதம்வரையிலான வரி உயர்வு, சீன செயலியான டிக் டாக் செயலிக்கு தடை, தைவான் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு, ஹுவாய் நிறுவனத்தின் பொருள்களுக்கு கட்டுப்பாடு முதலான அமெரிக்காவின் செயல்பாடுகளால் சீனா மிகவும் பாதிப்படைந்துள்ளது.
மேலும், சீனா மீதான வரியை 25 சதவிகிதத்துக்கு உயர்த்தவிருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். குறிப்பாக, உலகளவில் சீனா முதலிடத்தில் உள்ள மரக்கட்டை ஏற்றுமதியைக் குறிவைத்து, வரி உயர்வு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர்கள் வரலாற்றில் சீனாவை இந்தளவுக்கு சீண்டி பார்க்கும் ஒரே அதிபர் டிரம்ப்தான் என்று சிலர் கூறி வருகின்றனர்.
இதையும் படிக்க:சட்டவிரோதக் குடியேற்றம்: பள்ளி நண்பர்களின் கேலியால் சிறுமி தற்கொலை!
சீனாவுக்கு அதிகளவில் அமெரிக்கா தொல்லை கொடுத்து வந்தாலும், சீனா தொடர்ந்து அமைதி காத்து வருகிறது. அமெரிக்காவுக்கு தேவைப்படும் பொருள்களில் 18 சதவிகிதம், சீனாவிலிருந்துதான் ஏற்றுமதியாகிறது. சுமார் ரூ. 3.06 லட்சம் கோடி மதிப்பில் ஏற்றுமதியாகும் அமெரிக்காவுடனான வர்த்தக உறவை சீனா கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.
இந்த நிலையில்தான், சீனாவில் இருந்த அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கு மாறுவதற்கு திட்டமிருந்தன. அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கு மாறினால், இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரித்து பொருளாதாரமும் உயரும்.
இதற்கிடையே, சீனாவுடன் மீண்டும் வர்த்தகம் செய்யத் தயார் என்று டிரம்ப் கூறியிருப்பது சர்வதேச வர்த்தக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாறவிருந்த அமெரிக்க நிறுவனங்கள், தங்கள் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டன.