SA vs AFG: பௌலிங்கில் கோட்டைவிட்ட ஆப்கானிஸ்தான்; எளிதில் வென்ற தென்னாப்பிரிக்கா!
தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமாதான் டாஸை வென்றிருந்தார். முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார்.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 315 ரன்களை எடுத்திருந்தது. தென்னாப்பிரிக்க அணியின் சார்பில் ஓப்பனர் ரிக்கல்டன் சதமும் பவுமா, வாண்டர் டஸன், மார்க்ரம் ஆகியோர் அரைசதமும் அடித்திருந்தனர். பாகிஸ்தான் பிட்ச்கள் ஸ்பின்னுக்கு உகந்ததாக இருக்கின்றன என்பதால் ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர்கள் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கோட்டையே விட்டனர். இத்தனைக்கும் முகமது நபி வீசிய முதல் பந்திலேயே நல்ல ஷாட்களை ஆடிக்கொண்டிருந்த ஷார்ஸி அவுட் ஆனார்.

ஓப்பனிங் கூட்டணி சீக்கிரமே முறிந்தது. ஆனாலும், அந்த நல்ல தொடக்கத்தை ஆப்கானிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பவுமாவும் ரிக்கல்ட்டனும் நின்று நிதானமாக ஆடி விக்கெட் விடாமல் திடமான நிலைக்கு அணியை கொண்டு வந்துவிட்டனர்.
அரைசதத்தை கடந்த பிறகு கியரை மாற்ற முயன்ற பவுமாவும் நபியின் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். இதன்பிறகும் ரிக்கல்டன் நின்று ஆடி சதமடித்தார். அவரை ரஷீத் கான் சிறப்பான முறையில் ரன் அவுட் ஆக்கினார். ஆனால், அதற்குள்ளேயே அவர் செய்ய வேண்டிய சேதாரத்தையெல்லாம் செய்துவிட்டார். கடைசியில் வாண்டர் டஸனும் மார்க்ரமும் வேகமாக அரைசதத்தை அடித்து அணியின் ஸ்கோரை 300 க்கும் மேல் எடுத்து சென்றனர். 50 ஓவர்களை முடிக்கையில் தென்னாப்பிரிக்க அணி 315 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

ஆப்கானிஸ்தானின் பேட்டிங் லைன் அப்புக்கு இது பெரிய டார்கெட்தான். அவர்களின் ஓப்பனர்கள்தான் அந்த அணியின் பெரிய பலம். இப்ராஹிம் ஷத்ரானும் ரஹ்மானுல்லா குர்பாஸ் இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தால்தான் சாத்தியம் என தோன்றியது. ஆனால், அந்த கூட்டணி ஏமாற்றியது. குர்பாஸூக்கு இங்கிடி பைன் லெக்கை உள்ளே வைத்துவிட்டு ஒரு ஷார்ட் பிட்ச் டெலிவரியை வீசினார். பீல்டரை க்ளியர் செய்து பவுண்டரி ஆக்க முயன்று அந்த ஷார்ட் பைன் லெக் பீல்டரிடமே 10 ரன்களில் கேட்ச் ஆனார். இன்னொரு ஓப்பனரான இப்ராஹிம் 17 ரன்களில் ரபாடாவின் பந்தில் போல்ட் ஆனார்.
இதன்பிறகு ஆப்கானிஸ்தானின் இன்னிங்ஸில் எங்கேயுமே செல்ப் எடுக்கவில்லை. ரஹ்மத் ஷா மட்டும் ஒரு எண்ட்டில் நின்று ரன்களை சேர்த்துக் கொண்டிருந்தார். மற்ற பேட்டர்களெல்லாம் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகினர். தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

கடைசி விக்கெட்டாக ரஹ்மத் ஷாவும் 90 ரன்களில் ரபாடாவின் பந்தில் வீழ்ந்தார். 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோல்வியை தழுவியது. ஆப்கானிஸ்தானின் சமீபத்திய வளர்ச்சி அபரிதமாக இருந்தது. இந்த சாம்பியன்ஸ் டிராபியில் கட்டாயம் தாக்கம் ஏற்படுத்துவார்கள் என தோன்றியது. ஆனால், முதல் போட்டியிலேயே தோற்றிருக்கிறார்கள்.