Dhoni: `மன்னிக்கப் பழகுங்கள்; கடந்து செல்லுங்கள், அது வாழ்க்கையில்..!' - தோனி சொல்லும் அட்வைஸ்
தோனி, கடந்த 2019ம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டனாக ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்று காட்டியுள்ளார். பல தொடர்களில் அணியின் வெற்றிக்கு ஒரு பெரும் தூணாக இருந்து வெற்றிகளை குவித்தவர். ஐ.பி.எல் போட்டிகளில் மட்டுமே ஆடிவரும் தோனி, கூடிய விரைவிலேயே ஓய்வை அறிவிக்கக்கூடும்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தான் கிரிக்கெட்டை இன்னும் ரசித்து விளையாட விரும்புவதாகவும், நம்மிடம் பழிவாங்கும் எண்ணம் அதிகரித்து விட்டது என்றும் மனம் திறந்து பேசியிருக்கிறார். இது குறித்துப் பேசியிருக்கும் தோனி, "சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2019-ல் நான் ஓய்வு பெற்றேன். கடந்த சில வருடங்களாக கிரிக்கெட்டை ரசித்து விளையாடி வருகிறேன். அதை இன்னும் சில ஆண்டுகள் தொடர விரும்புகிறேன். என்னால் முடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பள்ளி பருவத்தில் கிரிக்கெட்
எப்படி நான் பள்ளி பருவத்தில் கிரிக்கெட்டை விரும்பி விளையாடினேனோ அதே போல இப்போதும் விளையாட விரும்புகிறேன். நாங்கள் தங்கியிருந்த காலனியில் மாலை 4 மணி என்பது விளையாட்டுக்கான நேரம். நாங்கள் அதிகம் கிரிக்கெட் தான் விளையாடுவோம். வானிலை ஒத்துழைக்கவில்லை என்றால் கால்பந்து ஆடுவோம். அப்போதிருந்த அதே வெகுளி தன்மையுடன் இப்போது விளையாட விரும்புகிறேன்.
ஒரு நல்ல மனிதனாக நினைவுகூரப்பட விரும்புகிறேன்
எல்லோரிடமும் எப்படி பழகினேன் என்பதன் மூலம் நான் ஒரு நல்ல மனிதனாக நினைவுகூரப்பட விரும்புகிறேன். உங்கள் முகத்தை எப்போதும் சிரித்தபடி வைத்துக் கொள்வதே உங்களின் பாதி பிரச்னையை தீர்த்துவிடும்.
அந்த பிரச்னையை தீர்ப்பது கடினமாக இருந்தாலும், ஒருவரை மன்னிக்க பழகுங்கள். இது அனைவரிடமும் இல்லாத ஒன்று. நம்மிடம் பழிவாங்கும் எண்ணம் அதிகரித்து விட்டது. மன்னியுங்கள். கடந்து செல்லுங்கள். வாழ்க்கையில் சந்தோஷமாக இருங்கள்" என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.