BANvIND: கேட்ச்சை விட்ட ரோஹித்; ஹாட்ரிக்கை தவறவிட்ட அக்சர் படேல்!' - என்ன நடந்தது?
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்த்து ஆடி வருகிறது. இந்தப் போட்டியில் அக்சர் படேல் ஹாட்ரிக் எடுக்கும் வாய்ப்பு உண்டானது. கேப்டன் ரோஹித் சர்மா கேட்ச்சை ட்ராப் செய்ததால் அந்த வாய்ப்பு நழுவிப்போனது.

வங்கதேச அணிதான் டாஸை வென்றது. முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தது. 'துபாய் மைதானங்களில் லைட்ஸின் கீழே பேட்டிங் நன்றாக ஆட முடியும். எனவே நாங்களும் முதலில் பந்துவீசவே நினைத்தோம்.' என ரோஹித் கூறியிருந்தார். இதன்படி வங்கதேசம் முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது. முதல் 10 ஓவர்களுக்குள்ளாகவே அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஷமி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஹர்ஷித் ராணா ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். இந்நிலையில், 9 வது ஓவரில் அக்சர் படேல் அறிமுகப்படுத்தப்பட்டார். அந்த ஓவரின் இரண்டு மற்றும் மூன்றாவது பந்தில் அடுத்தடுத்து தன்ஷித் ஹசன் மற்றும் முஷ்பிஹரை அக்சர் படேல் வீழ்த்தினார்.
இருவருமே ராகுலிடம் கேட்ச் ஆனார். அக்சர் படேலுக்கு ஹாட்ரிக் வாய்ப்பு கிடைத்தது. ஜேக்கர் அலி அந்த பந்தில் ஸ்ட்ரைக்கில் இருந்தார். இரண்டு ஸ்லிப்கள் + ஒரு லெக் ஸ்லிப்புடன் டைட்டாக பீல்ட் வைக்கப்பட்டிருந்தது. அக்சர் படேலும் பந்தை வீசினார். ஜேக்கர் அலி எட்ஜ் ஆக பந்து முதல் ஸ்லிப்பில் நின்ற ரோஹித்துக்கு கேட்ச் ஆக சென்றது. எளிமையான அந்தக் கேட்ச்சை ரோஹித் கோட்டைவிட்டார். இதனால் அக்சரின் ஹாட்ரிக் வாய்ப்பும் பறிபோனது.

விரக்தியான ரோஹித் களத்திலேயே அக்சர் படேலிடம் மன்னிப்பும் கேட்டார்.