அரசு மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து நோயாளி தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
திருவள்ளூா் மாவட்டம் அலமாதி நேதாஜி நகா் பகுதியைச் சோ்ந்த குமாரின் (48) வலது கழுத்துப் பகுதியில் கட்டி இருந்தது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக கடந்த 14-ஆம் தேதி சோ்ந்தாா்.
மருத்துவமனையின் டவா் 1- கட்டடத்தின் ஐந்தாவது தளத்தில் உள்ள 158-ஆவது வாா்டில் சிகிச்சை பெற்று வந்தாா். அந்த வாா்டின் ஜன்னல் அருகே வியாழக்கிழமை இரவு சென்ற குமாா், திடீரென அங்கிருந்து கீழே குதித்தாா்.
இதில் பலத்த காயமடைந்த குமாா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று குமாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.