காட்பாடியில் சாலையோரம் நின்றிருந்த கல்லூரிப் பேருந்தில் தீ!
வேலூர் மாவட்டம் காட்பாடியில், சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரிப் பேருந்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
காட்பாடி அடுத்த சேர்காடு கிராமப் பகுதியில், சாலையோரம் தனியார் கல்லூரிப் பேருந்து ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
வழக்கமாக, இரவில் பேருந்து நிறுத்தப்பட்டிருக்கும். காலையில் மாணவர்களை ஏற்றிச் செல்ல பேருந்து அங்கிருந்து எடுத்துச் செல்லப்படும். இன்று சனிக்கிழமை கல்லூரி விடுமுறை என்பதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று முற்பகலில், திடீரென பேருந்திலிருந்து லேசாக புகை வந்து, பிறகு தீப்பற்றி எரிந்தது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வாகனம் வருவதற்குள், பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்து நாசமானது.