பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவை: பாக். முன்னாள் வீரர்
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாபர் அசாம் அதிக ரிஸ்க் எடுத்திருக்க்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லாட்டிஃப் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி, பாகிஸ்தானை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 260 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தப் போட்டியில் சல்மான் அஹா மற்றும் குஷ்தில் ஷா அதிரடியாக 42 ரன்கள் மற்றும் 69 ரன்கள் முறையே எடுத்தனர். இருப்பினும், பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது.
இதையும் படிக்க: 10 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே சாப்பிடும் ஷமி..!
பாபர் அசாம் 90 பந்துகளில் 64 ரன்கள் எடுத்ததே தோல்விக்கு காரணம் என முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்தனர். ஆட்டத்தின் சூழலை உணர்ந்து அவர் அதிரடியாக விளையாடியிருக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
அதிக ரிஸ்க் எடுத்திருக்க வேண்டும்
முதல் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவிய நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாபர் அசாம் அதிக ரிஸ்க் எடுத்திருக்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லாட்டிஃப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவையே. பந்து விளையாடுவதற்கு ஏற்றாற்போல், பேட்டுக்கு சரியாக வரவில்லையென்றால், உங்களிடம் பிளான் பி இருந்திருக்க வேண்டும். தொடர்ச்சியாக ரன்கள் எடுக்காமல் பந்துகளை வீணடிக்கும்போது, அது அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பாபர் அசாம் அதிக ரிஸ்க் எடுத்திருக்க வேண்டும். ஆட்டத்தின் முதல் 10 ஓவர்களில் அதிக ரிஸ்க் எடுக்கலாம் என நான் நம்புகிறேன் என்றார்.
இதையும் படிக்க: ஒரேமாதிரி ஆட்டமிழக்கும் விராட் கோலி..! விமர்சித்த முன்னாள் இந்திய வீரர்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாளை (பிப்ரவரி 23) நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, இந்தியாவை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.