CT: 2013 `Magic' தோனி ; 2017 `Unlucky' கோலி - என்ன செய்யப்போகிறார் ரோஹித்?
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 8 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தொடங்கியிருக்கிறது. கடைசியாக நடந்த இரண்டு சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்தியா பைனலுக்குச் சென்றிருந்தது. அதில், ஒன்றில் வெற்றி, ஒன்றில் தோல்வி. இதனால், தொடர்ச்சியாக மூன்று முறை சாம்பியன்ஸ் டிராபி பைனலுக்கும் முதல் அணி என்ற சாதனைப் படைக்கும் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், இந்த சாம்பியன்ஸ் டிராபியை வென்றால், அதிக முறை சாம்பியன்ஸ் டிராபி வென்ற அணி என்ற சாதனையையும் இந்தியா படைக்கலாம். ஆனால், ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களைப் பொறுத்தவரையில் 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு இந்தியா ஐ.சி.சி தொடர்களில் செமி பைனல், பைனல் என எந்த அணியும் காணாத தோல்விகளைச் சந்தித்தது.
2014 டி20 WC பைனல், 2015 ஒருநாள் WC செமி பைனல், 2016 டி20 WC செமி பைனல், 2017 சாம்பியன்ஸ் டிராபி பைனல், 2019 ஒருநாள் WC செமி பைனல், 2021 & 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், 2022 டி20 WC செமி பைனல், 2023 ஒருநாள் WC பைனல் என அனைத்திலும் தோல்வி.

ஒருவழியாக இந்தியா, கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்று 11 வருடங்களுக்குப் பிறகு ஐ.சி.சி கோப்பையை உச்சி முகர்ந்து. ஆனால், அதுவுமே பும்ரா என்ற ஒற்றை ஆளால். இந்த இடத்தில்தான், ஒரு அணியாக வெற்றியை எப்படி தன்வசப்படுத்தி வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை 2013, 2017 சாம்பியன்ஸ் டிராபி பைனல்கள், துபாயில் சாம்பியன்ஸ் டிராபி விளையாட களமிறங்கியிருக்கும் ரோஹித் தலைமையிலான இந்திய அணியின் முன் ஒரு பாடமாக விரிகிறது.
மீண்டும் இளம் படையுடன் தோனி!
2007-ல் இளம் பட்டாளத்துடன், கேப்டனாகப் பொறுப்பேற்ற முதல் டி20 உலகக் கோப்பை தொடரில் ஓர் அணியாக சாம்பியன் பட்டம் வென்ற தோனி, 2011-ல் சீனியர் ஜூனியர் என கலவையான இந்திய அணியை களத்தில் திறம்பட கையாள, சச்சினின் நிறைவேறா ஆசையை ஒட்டுமொத்த வீரர்களும் தீர்த்துவைத்தனர்.
அதன்பிறகுதான் எதிர்கால இந்திய அணியை கட்டமைக்கும் வேலையில் இறங்கினார் தோனி. 2013 சாம்பியன்ஸ் டிராபி வந்தது. 2011 உலகக் கோப்பையில் இடம்பெற்றிருந்த சேவாக், கம்பீர், யுவராஜ், ஜாகீர் கான், ஹர்பஜன், நெஹ்ரா, யூசுப் பதான் ஆகியோரை விடுவித்து, ரோஹித், தவான், தினேஷ் கார்த்திக், ஜடேஜா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார் ஆகிய இளம் வீரர்களைத் தேர்வுசெய்தார். அத்தனை விமர்சனங்கள், ஆனால் விமர்சனங்கள் அனைத்தும் இளம் வீரர்களையும் பாதிக்காமல் கேப்டனாக முன்னின்று பார்த்துக்கொண்டார் தோனி.

லீக் சுற்றின் மூன்று ஆட்டங்களிலும் இந்திய பவுலர்கள் 30-ல் 29 விக்கெட்டுகளை சாய்த்தனர். ரோஹித், தவான், கோலி உள்ளிட்டோர் பேட்டிங்கில் ஜொலிக்க, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், அஷ்வின், உமேஷ் யாதவ் பவுலிங்கில் மிரட்ட, பேட்டிங் பவுலிங் இரண்டிலும் மிளிர்ந்தார் ஜடேஜா. இறுதிப் போட்டியும் வந்தது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி பவுலிங்கைத் தேர்வு செய்தது. ஆனால், மழை குறுக்கிட்டது. இறுதிப்போட்டிக்கு முன்புவரை இந்தத் தொடர் ஒருநாள் போட்டி வடிவில் நடைபெற்ற நிலையில், இப்போட்டி மட்டும் மழையால் தலா 20 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
வழக்கம்போல அதிரடி காட்ட ரோஹித்தும் தவானும் கிரீஸுக்குள் நுழைந்தனர். நான்காவது ஓவரிலேயே ரோஹித் போல்ட் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். அவரைத்தொடர்ந்து, தவான் கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்து 31 ரன்கள் அடித்து அவுட்டாக, தினேஷ் கார்த்திக், ரெய்னா, தோனி ஆகியோர் வரிசையாக ஒற்றை இலக்கத்தில் நடையைக் கட்டினர். இந்த இக்கட்டான சமயத்தில், கோலியுடன் கைகோர்த்த ஜடேஜா 2 பவுண்டரி, 2 சிக்ஸ் அடித்து கடைசிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக 33 ரன்களுடன் களத்தில் நின்றார். இறுதியில், 19-வது ஓவரில் 43 ரன்களில் கோலி ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு வெறும் 129 ரன்கள் மட்டுமே இந்தியா அடித்தது.

நினைத்துப் பாருங்கள், இப்போது டி20 போட்டியில் 200+ ரன்கள் அடித்தாலே எதிரணியை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கிறது. அப்போது, இந்திய இளம் வீரர்களின் மனநிலை எப்படியிருந்திருக்கும். ஆனால், அப்படியான இக்கட்டான சூழலில்தான் தோனி தனது கேப்டன்சியை மீண்டுமொருமுறை நிரூபித்தார். எப்போதும் ரன் அடிப்பதும், விக்கெட் எடுப்பதும் மட்டும் களத்தில் வெற்றியைத் தந்துவிடாது. முதலில் உளவியல் ரீதியாக வீரர்களைத் தயார் செய்ய வேண்டும்.
அதுலதான் நான் ஸ்பெஷலிஸ்ட் என்று, ``யாரும் மேலே பார்க்காதீர்கள். கடவுள் நம்மைக் காப்பற்ற வரப் போவதில்லை. சண்டையிட வேண்டும். நாம்தான் இப்போது நம்பர் ஒன் அணி. அதற்கேற்றாற்போல விளையாடவேண்டும். நம் தோற்கவேண்டுமென்றால் அதற்கு அவர்கள் ரன்கள் அடிக்க வேண்டும். ஆனால், ஒருபோதும் அது அவர்களுக்கு எளிதாக இருக்கக் கூடாது." என இளம் வீரர்களிடம் தோனி பற்றவைத்தார். அவ்வளவுதான், `பத்திக்கிச்சு ஒரு ராட்சச திரி-னு' இளம் பவுலிங் படை தீயாய் இறங்கியது.

இரண்டாவது ஓவரிலேயே இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக்கை 2 ரன்களில் காலி செய்தார் உமேஷ் யாதவ். அடுத்து ஆறாவது ஓவரில் ஜொனாதன் ட்ராட், எட்டாவது ஓவரில் ஜோ ரூட், ஒன்பதாவது ஓவரில் இயான் பெல் என அஸ்வினும், ஜடேஜாவும் மாறி மாறி விக்கெட் வேட்டையாடினர். ஆனால் அதன்பிறகுதான், இயான் மோர்கனும், ரவி பொபாராவும் ஆட்டம் காண்பிக்கத் தொடங்கினர். 17-வது ஓவர் வரை விக்கெட்டே விழவில்லை. இருவரும் நிலைத்து நின்றனர்.
இங்கிலாந்தின் வெற்றிக்கு 18 பந்துகளில் 28 ரன்கள் தேவை. அந்த சமயத்தில், 3 ஓவர்கள் வீசி 9 எக்கனாமியில் 27 ரன்கள் வாரி வழங்கியிருந்த இஷாந்த் சர்மாவின் கைகளில் பந்தைக் கொடுக்கிறார் தோனி. `ஏன் இவருக்கு ஓவர் கொடுக்கிறார், தோனிக்கு என்னாச்சு' என்று எல்லோரும் முணுமுணுக்கத் தொடங்கினர். அதற்கேற்றாற்போலவே, முதல் பந்தை டாட் பால் ஆக்கி அடுத்த பந்திலேயே சிக்ஸ் கொடுத்தார் இஷாந்த் சர்மா. அதோடு, அடுத்தடுத்து இரண்டு வைடு பால் வீசி மேலும் பரபரப்பைக் கூட்டினார். அப்போதுதான், அவுட்சைட் ஆஃப் திசையில் பந்துவீசி மோர்கன் விக்கெட்டை எடுத்து இங்கிலாந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தார் இஷாந்த் சர்மா. அதற்கடுத்த பந்தை ஷார்ட் பாலாக வீசி ரவி பொபாராவையும் காலி செய்தார். இரண்டு செட்டிலான பேட்ஸ்மேன்களும் அவுட். அந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளிலும் ஒரு பால் டாட், ஒரு பால் சிங்கிள். எதற்காக இஷாந்த் சர்மாவுக்கு தோனி ஓவர் கொடுத்தார் என்று முணுமுணுத்தவர்களெல்லாம் வாயடைத்துப்போனார்கள்.

ஆட்டத்தின் முக்கியமான 19-வது ஓவரை வீச வந்தார் தொடரின் லீடிங் விக்கெட் டேக்கர் ஜடேஜா. இங்கிலாந்துக்கு 12 பந்துகளில் 19 ரன்கள் தேவை. முதல் பந்தில் ப்ரெஸ்னன் ஒரு ரன் எடுக்க, ஜாஸ் பட்லர் கிரீஸுக்கு வந்தார். அடிக்க இடமே கொடுக்காத ஜடேஜா, இரண்டாவது பதில் ஜாஸ் பட்லரை கிளீன் போல்டாக்கினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஸ்டூவர்ட் பிராட் மூன்றாவது பந்தில் சிங்கிள் எடுத்தார். அடுத்த பந்தில் ப்ரெஸ்னனும் அவுட். ஆனால், இந்த முறை விக்கெட் எடுத்தது ஜடேஜா அல்ல ரோஹித், ரன் அவுட். கடைசி இரண்டு பந்துகளில் இரண்டில் சிங்கிள்.
6 பந்துகளில் 15 அடித்தால் இங்கிலாந்து வெற்றி. கடைசி ஓவரை வீச அஸ்வினை அழைத்தார் தோனி. முதல் பந்தே டாட். ஆட்டம் இந்தியா பக்கம் வந்துவிட்டது என்ற நினைக்கையில், இரண்டாவது பந்தில் பிராட் பவுண்டரி அடிக்க இங்கிலாந்தின் கை ஓங்கியது. மூன்றாவது பந்தில் ஒரு சிங்கிள். நான்கு மற்றும் ஐந்தாவது பந்தில் தலா இரண்டு ரன்களை எடுத்தார் ஜேம்ஸ் ட்ரெட்வெல்.

கடைசி ஒரே பால், சிக்ஸ் அடித்தால் இங்கிலாந்து சாம்பியன். இந்திய ரசிகர்கள் அனைவரும் நகம் கடித்துக்கொண்டு உற்றுப்பார்க்க, `இதான் உன் டைம் நல்ல பாத்துக்கோ'-னு அஸ்வின் மண்டைல ஓட, கடைசி பந்தும் வீசப்பட்டது. எப்போதும் ஆர்ப்பாட்டமில்லாத தோனி துள்ளிக்குதிக்கிறார். இப்போது இருப்பதை போல சோசியல் மீடியாக்கள் மிகப் பரவலாக அப்போது இருந்திருந்தால், அப்போதே மார்ட்டின் ஸ்கோர்சீஸ் போட்டோவை வைத்து, `Absolute Cinema' என்று இந்தப் போட்டியை படு வைரலாக்கியிருப்பார்கள்.

இந்தத் தொடரில் இளம் வீரர்களாக விளையாடிய தவான் - ரோஹித் ஜோடி பின்னாளில் இந்திய கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத ஓப்பனர்களாக உருவெடுத்தனர். இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புவனேஷ்குமார் காம்போ பின்னாளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் வேகப்பந்துவீச்சு முகத்தையே மாற்றினார்கள். அஸ்வின் - ஜடேஜா ஸ்பின் கூட்டணி டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. தோனி எப்போதும் சொல்வதைப்போல, `முடிவைப் பற்றி யோசிக்காமல், விளையாட்டில் 100 சதவிகித உழைப்பையும் போட்டால் வெற்றி தானாக வரும்' என்பதை இந்தப் போட்டி மீண்டுமொருமுறை உணர்த்தியது.
கோலிக்கு தேடிவந்த கேப்டன்சி!
2017 ஜனவரியில் இங்கிலாந்துக்கெதிரான தொடருக்கு முன்பாக ஒயிட் பால் கிரிக்கெட்டில் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக தோனி அறிவிக்கிறார். எந்த ஆட்சேபனையுமின்றி கேப்டன்சி கோலி வசம் செல்கிறது. அடுத்த ஆறு மாதத்தில் இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் வந்தது. இப்போது பாகிஸ்தானைப் போல அப்போது இந்திய அணி நடப்பு சம்பியனாகக் களமிறங்கியது. தோனி விட்ட இடத்திலிருந்து, தோனியைப் போலவே கேப்டனாக முதல் ஐ.சி.சி தொடரிலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பு விராட் கோலிக்கு அமைந்தது.

அதற்கான அத்தனையும் நடந்தது. குரூப் பி-ல் பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளுடன் இந்தியா இடம்பெற்றிருந்தது. குரூப் சுற்றில் முதல் மேட்சில் பாகிஸ்தானைப் பந்தாடிய இந்திய அணி, இரண்டாவது ஆட்டத்தில் 300+ ரன்கள் அடித்தும் இலங்கையிடம் தோற்றது. அதைத்தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுடனான கடைசி குரூப் சுற்று போட்டியில், வென்றால்தான் செமி பைனலுக்கு செல்ல முடியும் என்ற நெருக்கடியுடன் விளையாடிய இந்திய வீரர்கள், தென்னாப்பிரிக்காவை 191 ரன்களில் சுருட்டி எளிதாக வென்றது.

அதேபாணியில், பங்களாதேஷை வென்று பைனலுக்கும் சென்றது. மறுபக்கம், குரூப் சுற்றில் இந்தியாவிடம் தோற்றிருந்த பாகிஸ்தான், செமி பைனலில் இங்கிலாந்தை அசால்ட்டாக டீல் செய்து இந்தியாவுக்கு முன்னராக பைனலுக்கு வந்து, 2007 டி20 பைனல், 2011 ஒருநாள் உலகக் கோப்பை செமி பைனல் தோல்விகளுக்கு பதிலடி கொடுக்க காத்திருந்தது.
2017, ஜூன் 18 லண்டன் ஓவல் மைதானத்தில் பைனல் பலப்பரீட்சை தொடங்கியது. பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்தத் தொடர் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான ஃபக்கர் ஜமானும், அசார் அலியும் ஓப்பனர்ளாக இன்னிங்க்ஸைத் தொடங்கினர். புவனேஷ்வர் குமார் முதல் ஓவரை வீச, ஆட்டத்தின் நான்காவது ஓவரிலேயே ஃபக்கர் ஜமானை 3 ரன்களில் அவுட்டாக்கினார் பும்ரா. ஆனால், ரீப்ளேயில் அது நோ பால் என்று தெரியவர மீண்டும் கிரீஸுக்குள் வந்த ஃபக்கர் ஜமானை இந்திய பவுலர்களால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஃபோர், சிக்ஸ் என பந்தை நாலாபுறமும் சிதறடித்தார்.

மறுமுனையில், அசார் அலியும் தன் பங்குக்கு அரைசதம் அடித்து கைகொடுத்தார். ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் 100 ரன்களைக் கடந்தது. ஒருவழியாக, 128-வது ரன்னில் முதல் விக்கெட் கிடைத்தது. அதுவும், அசார் அலியின் ரன் அவுட்டால். பின்னர், ஒன்டவுனில் இறங்கிய பாபர் அசாமுடன் கைகோர்த்த ஃபக்கர் ஜமான் தனது கன்னி சதத்தை அடித்து அசத்தினார். அணியின் ஸ்கோர் 200 ரன்களை எட்டியபோது ஹர்திக் பாண்டியாவின் பந்தில் ஃபக்கர் ஜமான் 112 ரன்களில் அவுட்டாக, அவரைத்தொடர்ந்து சோயப் மாலிக், பாபர் அசாம் ஆகியோர் வரிசையாக அவுட்டாகினர்.
இறுதியில், முகமது ஹஃபீஸின் அதிரடி அரைசதத்தால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 338 ரன்கள் அடித்து, இந்திய அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது. டார்கெட் 339 என்றாலும், ரோஹித், தவான், கோலி, யுவராஜ், கேதர் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா என்ற இந்திய அணியின் பேட்டிங் லைன் அப் நம்பிக்கையளித்தது. ஆனால், அந்த நம்பிக்கையில் தனது முதல் ஓவரிலேயே சிறு கல்லை வீசி அதிர்ச்சி ஏற்படுத்தினார் பாகிஸ்தான் நட்சத்திர பவுலர் முகமது அமீர். வழக்கம்போல ரோஹித்தும், தவானும் ஓப்பனிங் இறங்கினர்.

முதல் ஓவரை அமீர் வீச வந்தார். முதல் இரண்டு பந்துகளை டாட் பால் ஆக்கிய அமீர், மூன்றாவது பந்திலேயே ரோஹித்தை எல்.பி.டபிள்யு முறையில் அவுட்டாக்கி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தார். 0 ரன்னுக்கு 1 விக்கெட் என தொடக்கத்திலேயே பாகிஸ்தான் பக்கம் காற்று வீசத் தொடங்கியது. அந்தக் காற்றை திசைமாறாமல் பார்த்துக்கொள்ளும் வேளையில் தீவிரமானார் அமீர். கேப்டன் என்ற கூடுதல் பொறுப்புடன் ஒன்டவுனில் இறங்கினார் கோலி. ஆட்டத்தின் மூன்றாவது ஓவராக தனது இரண்டாவது ஓவரை அமீர் வீச வந்தார்.
அந்த ஓவரின் மூன்றாவது பந்து கோலியின் பேட்டில் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் நின்ற அசார் அலியை நோக்கிச் சென்றது. ஆனால், அந்த வாய்ப்பை அவர் தவற விட்டுவிட்டார். கோபம் கலந்த உச்சகட்ட விரக்தியில் அமீர். இருப்பினும், அமீர் அதை அப்படியே எனர்ஜியாக மாற்றி அடுத்த பந்திலேயே விராட்டின் விக்கெட்டை வீழ்த்தி இந்திய ரசிகர்களின் நம்பிக்கையில் ஒரு விரிசலை ஏற்படுத்தினார். இந்தியா 6 ரன்னுக்கு 2 விக்கெட். நான்காவது பேட்ஸ்மேனாக யுவராஜ் களமிறங்கினார். தவான் - யுவராஜ் ஜோடி நிதானமாக விக்கெட் விடாமல் 6 ஓவர்களைக் கடந்தது. இருப்பினும், அமீர் தனது விக்கெட் வேட்கையை விடவில்லை. பவர்பிளேவுக்கு முந்தைய ஓவரின் கடைசி பாலில் தவானின் விக்கெட்டையும் அமீர் கைப்பற்றினார். ஒற்றை ஆளாக இந்திய அணியின் டாப் ஆர்டர் நம்பிக்கைச் சுவரை தரைமட்டமாக்கினார் அமீர்.

பவர்பிளே முடிவில் 47 ரன்னுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலையில் யுவராஜும், தோனியும் களத்தில் நின்று கொண்டிருந்தனர். இந்த ஜோடியாவது இந்திய அணியை கரைசேர்க்குமா என்று இந்திய ரசிகர்கள் ஏங்கிக்கொண்டிருந்த வேளையில், 13-வது ஓவரை வீசிய 18 வயது இளம் வீரர் சதாப் கானிடம் எல்.பி.டபிள்யு முறையில் விக்கெட்டைப் பறிகொடுத்தார் யுவராஜ். அவரைத்தொடர்ந்து, கொஞ்சம் பெருமூச்சு விடக்கூட நேரம் கொடுக்காமல், அடுத்த ஓவரிலேயே 4 ரன்களில் தோனியும் அவுட்டாகி பெரும் ஏமாற்றம் தந்தார்.
அவரைத்தொடர்ந்து, கேதர் ஜாதவும் 9 ரன்னில் பெவிலியனுக்குத் திரும்பினார். 72 ரன்களில் இந்திய அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் அவுட்டாகிவிட்டனர். இனி, ஜடேஜா, ஹர்திக், அஸ்வின் ஆகிய மூன்று ஆல்ரவுண்டர்கள் மட்டும்தான். அவ்வளவுதான் என பாகிஸ்தானின் கை ஓங்கிவிட்டது என்ற நிலையில், `கத இன்னும் முடியலன்னு' ஆரம்பித்தார் ஹர்திக். 1, 2-லாம் கிடையாது, அடிச்சா சிக்ஸ்தான் என ஹர்திக் வானவேடிக்கை காட்ட ஆரம்பித்தார். சதாப் கான் வீசிய ஆட்டத்தின் 23-வது ஓவரில் முதல் நான்கு பந்துகளில் 6,6,6,4 என பாகிஸ்தானைக் கொஞ்சம் பதறவைத்தார்.

ஹர்திக் - ஜடேஜா பார்ட்னர்ஷிப் 50 ரன்களைக் கடந்தது. எல்லாம் சரியாகச் செல்கிறது என இந்திய ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில், 27-வது ஓவரில் ஜடேஜா பவுலிங் முனையில் நிற்க, ஒரு மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்கால் தேவையில்லாமல் ரன் அவுட்டானார் ஹர்திக். அப்போதே முடிவும் தெரிந்துவிட்டது.
அடுத்த ஓவரில் ஜடேஜா அவுட், அதற்கடுத்த ஓவரில் அஸ்வின் அவுட், கடைசி ஆளாக 31-வது ஓவரில் பும்ராவும் அவுட். 158 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட். 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் மாபெரும் வெற்றி. சர்பராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியின் பெயர் 2017 சாம்பியன்ஸ் டிராபியில் பொறிக்கப்பட்டது.

கேப்டனாக ஐ.சி.சி கோப்பையை இந்திய அணிக்கு வென்று தரவேண்டும் என்ற கோலியின் கனவு முதல்முறையாக அன்று நொறுங்கியது. அடுத்தடுத்து, 2019 ஒருநாள் உலகக் கோப்பை செமி பைனல், 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலிலும் கோலியின் கனவுகள் நொறுங்கியது. கடைசிவரை, கேப்டன் கோலியின் கரங்களை அலங்கரிக்கும் வாய்ப்பு ஐ.சி.சி கோப்பைகளுக்கு வாய்க்காமலேபோய்விட்டது.

2013, 2017 சாம்பியன்ஸ் டிராபி பைனல்கள், அணியில் யார் இருக்கிறார்கள் என்பதைத் தாண்டி, இருக்கின்ற வீரர்கள் சூழலுக்குற்றவாறு எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதையே உணர்த்துகிறது. இனி, நடப்பு சாம்பியன்ஸ் டிராபியில் ரோஹித் எப்படி வழிநடத்தப்போகிறார், இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி வெல்லுமா என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்!
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எந்தெந்த அணிகள் செமி முன்னேறும், யார் கோப்பையை வெல்வார்கள் என்ற உங்களின் கணிப்பை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.