திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
Mohammed Shami: ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள்... அகர்கார், ஜாகீர் கானை தனித்தனியே முந்திய ஷமி!
சாம்பியன்ஸ் டிராபியில் பங்களாதேஷுக்கு எதிரான இன்றைய போட்டியில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், இரண்டு சாதனைகளைப் படைத்திருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. இந்தியாவின் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது. அதன்படி இந்தியாவின் முதல் போட்டி துபாயில், பங்களாதேஷுக்கு எதிராக இன்று பிற்பகல் 2:30 மணிக்குத் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு முதல் ஓவரை வீசிய இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, அந்த ஓவரின் கடைசி பந்தில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.

அப்படியே பங்களாதேஷ் அணியில் விக்கெட்டுகள் சீட்டுக் கட்டுகள் போலச் சரிந்தன. 9 ஓவர்களில் 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது பங்களாதேஷ். அப்போது கைகோத்த தவ்ஹித் ஹ்ரிதாய், ஜேக்கர் அலி நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். இறுதியில், தவ்ஹித் ஹ்ரிதாயின் சதம் மற்றும் ஜேக்கர் அலியின் அரைசதத்தால் 49.4 ஓவர்களில் 228 ரன்கள் அடித்து ஆள் அவுட்டானது. இந்திய சார்பில், அதிகபட்சமாக ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் ஷமியின் விக்கெட் எண்ணிக்கை 202-ஆக உயர, ஒருநாள் போட்டி கரியரில் அதிவேகமாக(104 போட்டிகள்) 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையை ஷமி படைத்தார். இதற்கு முன்பு, முன்னாள் வீரர் அஜித் அகர்கார் 133 போட்டிகளில் இந்த இலக்கை எட்டியிருந்தார். ஷமி இந்த சாதனை மட்டுமல்லாது மேலும் ஒரு சாதனையும் படைத்திருக்கிறார். அதோடு, பந்துகளின் அடிப்படையில் 5126 பந்துகளில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷமி, அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய பவுலர் மிட்செல் ஸ்டார்க்கை (5240 பந்துகளில் 200 விக்கெட்) பின்னுக்குத் தள்ளினார்.

இந்தப் போட்டியின் மூலம், 50 ஓவர் வடிவிலான (ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி) ஐ.சி.சி தொடரில் 19-இன்னிங்ஸில் மொத்தம் 60 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் ஷமி. இதனால், ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்தியர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜாகீர் கானை (32 இன்னிங்ஸில் 59 விக்கெட்டுகள்) பின்னுக்குத் தள்ளி ஷமி முதலிடம் பிடித்திருக்கிறார். அடுத்தடுத்த இடங்களில் ஜவகல் ஸ்ரீநாத் (47 விக்கெட்டுகள்), ஜடேஜா (43 விக்கெட்டுகள்) ஆகியோர் இருக்கின்றனர்.