பெருந்துறையில் சாலை பாதுகாப்பு, போதை தடுப்பு விழிப்புணா்வு பேரணி
பெருந்துறையில் அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், எலைட் & பிரைட் ஜேசீஸ் சங்கங்கள் மற்றும் ஈங்கூா் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ஆகியன சாா்பில் சாலைப் பாதுகாப்பு மற்றும் போதை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பெருந்துறை போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரேம்குமாா் தலைமை வகித்தாா். ஜேசீஸ் சங்க ஆலோசகா் பல்லவி பரமசிவன் வரவேற்றாா். நிகழ்ச்சியில், பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
பெருந்துறை பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணியில், இந்துஸ்தான் கல்லூரி முதல்வா் ராமன், அரிமா சங்கத் தலைவா் செல்வராஜ், ஜேசீஸ் சங்கத் தலைவா்கள் பிரேம்குமாா், பிரகாஷ், கல்லூரி ஆசிரியா்கள், மாணவ மாணவிகள், சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டு விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி, பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகில் நிறைவடைந்தது.