இரவில் பெண்ணுக்கு மோசமான குறுந்தகவல் அனுப்புவது குற்றம்: நீதிமன்றம்
இரவு நேரத்தில் பெண்ணுக்கு தவறான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அனுப்புவது குற்றம் என்று மும்பை அமர்வு நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
இரவு நேரத்தில் அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு “நீ ஒல்லியாக, புத்திசாலியாக, அழகாக இருக்கிறாய், உன்னை விரும்புகிறேன்” இதுபோன்ற செய்திகளை அனுப்புவது தவறு என்று அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் பெண் தொழிலதிபருக்கு வாட்ஸ்ஆப்பில் தவறான தகவல்களை அனுப்பியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நபருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதிசெய்யும்போது கூடுதல் அமர்வு நீதிபதி டிஜி தோப்லே அவரது கருத்தைத் தெரிவித்தார்.
மோசமானது, தற்கால சராசரி மனிதனின் சமூக கண்ணோட்டத்திலிருந்து இதனைப் பார்த்து தீர்மானிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
புகார்தாரருக்கு, இரவு 11 மணிமுதல் 12.30 மணிக்குள்ளாக நீ ஒல்லியாக, புத்திசாலியாக, அழகாக இருக்கிறாய், உன்னை விரும்புகிறேன், என் வயது 40. உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா? இல்லையா? போன்ற தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அனுப்பியதாக பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
”எந்தவொரு திருமாண பெண்ணும், செல்வாக்குள்ள கணவருடன் வாழ்பவர்” இதுபோன்ற தகவல்கள் மற்றும் புகைப்படங்களை அதுவும் அறிமுகம் இல்லாத ஒரு நபர் அனுப்பும்போது அதனைப் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் என்று நீதிபதி தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கும், அப்பெண்ணுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த செய்தியும் செயலும் பெண்ணை அவமதிப்பதாக உள்ளது என்று நீதிபதி தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த 2022 ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்து, 3 மாதம் சிறைத் தண்டணையை விசாரணை நீதிமன்றம் விதித்தது.
இதையும் படிக்க: சொத்துகள் முடக்கம் அமலாக்கத் துறையின் அதிகார துஷ்பிரயோகம்: இயக்குநர் ஷங்கர்
இந்நிலையில், அவர் விசாரணை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் அரசியல் போட்டிக் காரணமாக பொய்வழக்கு போட்டதாக கூறினார். ஆனால் அவரது வாதத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை என்று அவரது வாதத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. மேலும் எந்த பெண்ணும் பொய் வழக்குபோட்டு தனது கண்ணியத்தை பணயம் வைக்க மாட்டாள் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
அப்பெண்ணுக்கு குற்றம் சாட்டப்பட்டவர் மோசமான தகவல்கள்மற்றும் புகைப்படங்களை அனுப்பியதை அரசு தரப்பு நிரூபித்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது. எனவே விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும் என்று அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.