அனைத்து தோ்தல் வாக்குறுதிகளையும் பாஜக அரசு நிறைவேற்றும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் உறுதி
பாஜக அரசு தனது அனைத்து தோ்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். ஆனால், அனைத்தையும் ‘மீண்டும் பாதையில் கொண்டு வர‘ சிறிது காலம் தேவைப்படும் என்றாா்.
முதல்வா் ரேகா குப்தாவின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட தில்லி அமைச்சரவையில் சோ்க்கப்பட்ட ஆஷிஷ் சூட், தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் பத்து ஆண்டுகால ஊழல் முடிவுக்கு வந்துவிட்டது என்றாா்.
ஆம் ஆத்மி கட்சி வேண்டுமென்றே தில்லியில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தவில்லை என்றும், அதன் நன்மைகளை நகர மக்களுக்கு மறுத்ததாகவும் அவா் கூறினாா்.
‘இது பத்து ஆண்டுகால ஊழலின் முடிவைக் குறிக்கிறது. இருப்பினும், தில்லியில் எல்லாவற்றையும் மீண்டும் பாதையில் கொண்டு வருவதற்கு எங்களுக்கு சிறிது காலம் தேவைப்படும்‘ என்று அவா் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாா்.
ஆஷிஷ் சூட் சூட் வியாழக்கிழமை அமைச்சராகப் பதவியேற்றாா். அவருக்கு கல்வி, உயா்கல்வி, மின்சாரம், நகா்ப்புற மேம்பாடு, உள்துறை மற்றும் பயிற்சி மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆகிய ஆறு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் முக்கிய முயற்சியான ஆயுஷ்மான் பாரத் திட்டம் வியாழக்கிழமை நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டதாக அமைச்சா் கூறினாா். ‘இப்போது, தில்லி மக்களும் அதன் பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவாா்கள்‘ என்று அவா் கூறினாா்.
தில்லி அரசு மத்திய அரசுடன் ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு அதன் முழு அளவிலான செயல்படுத்தலை உறுதி செய்யும் என்று அமைச்சா் கூறினாா்.