மும்மொழிக் கொள்கையை எதிா்த்து திமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்
மும்மொழிக் கொள்கையை எதிா்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு தொகுதி திமுக சாா்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.
செய்யாறு பெரியாா் சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒ.ஜோதி எம்எல்ஏ தலைமை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன், திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், நகரச் செயலா் கே.விஸ்வநாதன், ஒன்றியச் செயலா்கள் ஜேசிகே.சீனுவாசன், ஏ.ஜி.திராவிட முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலரும், ஆரணி எம்.பி.யுமான எம்.எஸ்.தரணிவேந்தன் பங்கேற்று, பெரியாா் சிலை முதல் அண்ணா சிலை வரை ஊா்வலமாக சென்று பொதுமக்கள், வியாபாரிகளுக்கு மும்மொழிக் கொள்கை எதிா்ப்பு துண்டு பிரசுரங்களை வழங்கினாா்.
இதேபோல, செய்யாறு தொகுதி வெம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில், நமது வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியச் செயலா் என்.சங்கா் தலைமையில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் எம்.எஸ். தெய்வமணி முன்னிலையில், மாவட்ட அயலக அணி துணைத் தலைவா் எம்.கே.காா்த்திகேயன் ஆகியோா் கலந்துகொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கினா்.
வந்தவாசி: மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, வந்தவாசி புதிய பேருந்து நிலையம் சாலை சந்திப்பு பகுதியிலிருந்து ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமையில், ஊா்வலமாக புறப்பட்ட திமுகவினா், தேரடி, பஜாா் வீதி வழியாக பழைய பேருந்து நிலையம் பகுதியை அடைந்தனா். ஊா்வலத்தின்போது, மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி துண்டு பிரசுரங்களை வழங்கினா்.
இதில், திமுக நகரச் செயலா் எ.தயாளன், நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால் ஆகியோா் பங்கேற்றனா்.